ராணா, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பத...
குஜராத்: திடீரென இடிந்து விழுந்த பாலம்; ஆற்றில் விழுந்த வாகனங்கள் - 9 பேர் உயிரிழப்பு
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள முஜ்பூரையும் அருகில் உள்ள ஆனந்த் மாவட்டத்தில் இருக்கும் கம்பீரா என்ற இடத்தையும் இணைக்கும் வகையில் மஹிசாகர் ஆற்றின் மீது மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. இந்த பாலத்தின் மீது இன்று காலை வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது மேம்பாலத்தின் மத்திய பகுதி திடீரென இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.
அந்நேரம் அந்த மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு லாரி, இரண்டு வேன், ஒரு ஆட்டோ போன்றவை ஆற்றில் விழுந்தது. அதில் இருந்தவர்கள் ஆற்றில் விழுந்து உதவி கேட்டு கூச்சலிட்டனர். ஒரு டேங்கர் லாரி இடிந்து விழுந்த மேம்பாலத்தில் பாதி வெளியில் வந்த நிலையில் கீழே விழும் வகையில் ஊசலாடிக்கொண்டிருந்தது. தீயணைப்பு துறையினரும், போலீஸாரும், பேரிடர் மீட்புப்படையும் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு சிலர் உயிரிழந்துவிட்டனர். மேலும் 5 பேர் உயிரோடு மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அனில் தெரிவித்துள்ளார்.

மேம்பாலம் இடிந்துவிழுந்தபோது அதில் இரு இருசக்கர வாகனங்களும் சென்றது உறுதிபடுத்தப்பட்டு இருக்கிறது. அவை தண்ணீரில் மூழ்கி இருக்கிறதா என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேம்பாலம் இடிந்து விழுந்த பகுதி அதிக ஆழம் கொண்டது கிடையாது. எனவே மீட்புப்பணியில் பெரிய அளவில் பிரச்னை ஏற்படவில்லை. பாலம் இடிந்து விழுவதற்கு முன்பு பாலத்தில் விரிசல் ஏற்பட்டபோது பெரிய சத்தம் வந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இடிந்து விழுந்த மேம்பாலம் 43 ஆண்டுகள் பழமையானது ஆகும். கடந்த ஆண்டுதான் மேம்பாலம் பழுதுபார்க்கப்பட்டது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. குஜராத்தை செளராஷ்டிராவுடன் இணைக்கும் வகையில் இந்த பாலம் இருந்தது. எனவே எப்போதும் பாலம் மிகவும் பிஸியாக இருந்து வந்தது. ஆனால் இப்பாலத்தை சரியாக பராமரிக்காமல் மாவட்ட நிர்வாகம் புறக்கணித்து வந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டி இருக்கின்றனர்.