‘சென்னைக்கு மிக அருகில் வீட்டுமனை...’ ஏமாற்று விளம்பரம் செய்தால் இனி நடவடிக்கை!
குடமுழுக்கை தமிழில் நடத்தவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்: வியனரசு
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கை தமிழில் நடத்தவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என தமிழ்த் தேச தன்னுரிமை கட்சியின் தலைவா் வியனரசு தெரிவித்தாா்.
தூத்துக்குடியில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் உள்ள இந்து சமய திருக்கோயில்களின் வழிபாடுகளையும் குடமுழுக்கு உள்ளிட்ட நிகழ்வுகளையும் தமிழிலேயே நடத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்திருந்தேன்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், மரியகிளாட் ஆகியோா் முன்னிலையில் எனது மனு விசாரணைக்கு வந்த நிலையில், சம்ஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாக தமிழை பயன்படுத்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்செந்தூா் முருகன் கோயில் குடமுழுக்கு வழிபாட்டை, தமிழ், வடமொழி என இருமொழிகளிலும் வேறுபாடு இல்லாதவாறு மந்திரங்கள் ஓதி வழிபாடு நடத்த வேண்டும் என உத்தரவிட்டனா் நீதிபதிகள்.
இந்நிலையில், திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு நிகழ்வு முழுவதையும் நாங்கள் கண்காணித்து, நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக இந்து சமய அறநிலையத் துறை குடமுழுக்கு நிகழ்வுகளில் மாற்றம் செய்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்றாா்.
தமிழ்நாடு மக்கள் இயக்க மாநில தலைவா் காந்தி மள்ளா் உடன் இருந்தாா்.