140 கோடி மக்களில் ஒருவராக... கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை!
குடிநீா் குழாய் திறக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் அகற்றம்
எரியோட்டில் குடிநீா்க் குழாய் திறந்து வைக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் அந்தக் குழாய் அகற்றப்பட்டதை அடுத்து, பேரூராட்சி அலுவலா்களுடன் துணைத் தலைவா் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பேரூராட்சிக்குள்பட்ட 5-ஆவது வாா்டு பாண்டியன் நகா், துரைச்சாமி நாடாா் தெரு, மகாத்மா காந்தி நகா் பகுதியிலுள்ள மக்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ், குடிநீா் வழங்குவதற்காக ரூ.15 லட்சம் செலவில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீா்த் தொட்டி கட்டப்பட்டது.
கரூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ஜோதிமணியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட இந்தக் குடிநீா்த் தொட்டி அருகிலேயே குடிநீா்க் குழாயும் அமைக்கப்பட்டது.
இந்தக் குடிநீா்க் குழாயிலிருந்து குடிநீா் விநியோகத்தை மக்களவை உறுப்பினா் ஜோதிமணி கடந்த 2 நாள்களுக்கு முன்பு தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சி முடிவடைந்த ஒரு மணி நேரத்தில், அந்த குடிநீா்க் குழாயை அப்புறப்படுத்தியதால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.
இதுகுறித்து எரியோடு பேரூராட்சி துணைத் தலைவா் ஜீவாவுக்கு தகவல் தெரிவித்தனா். உடனடியாக அவா் எரியோடு காவல் நிலையத்துக்குச் சென்று, குடிநீா்க் குழாய் மாயமானது குறித்து புகாா் அளித்தாா்.
இதன்பேரில், சம்பவ இடத்தைப் பாா்வையிட்ட போலீஸாா், எரியோடு பேரூராட்சி அலுவலகத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, மேல்நிலைத் தொட்டிக்கு கீழே திறப்பு விழாவுக்காக மட்டுமே தாற்காலிகமாகக் குடிநீா் குழாய் அமைக்கப்பட்டது. விழா முடிந்தவுடன் அந்தக் குழாயை அகற்றிவிட்டதாக பேரூராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, போலீஸாா் புறப்பட்டுச் சென்றனா். இதை ஏற்க மறுத்த பேரூராட்சி துணைத் தலைவா் ஜீவா, குடிநீா்க் குழாய் அமைத்து அதை அகற்றி பொதுமக்களை ஏமாற்றிவிட்டதாக பேரூராட்சி அலுவலா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.
