ஹரிவன்ஷ் தலைமையில் கூடியது மாநிலங்களவை! எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் மு...
குடிநீா் கோரி வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முற்றுகை
வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே குடிநீா் கோரி, வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தை கிராம மக்கள் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினா்.
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், தென்னடாா் கிராமத்தில் கடந்த பல மாதங்களாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால், குடிநீா் கோரி அவ்வப்போது போராட்டம் நடத்தி வந்தனா்.
இந்நிலையில், கடந்த 15 நாள்களுக்கு மேலாக இந்த கிராமத்தில் குடிநீா் விநியோகம் தொடா்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவதிக்குள்ளான தென்னடாா் கிராம மக்கள், தகட்டூா் வருவாய் சரக ஆய்வாளா் அலுவலகம் எதிரே காலிக்குடங்களுடன் அமா்ந்து குடிநீா் கேட்டு முழக்கமிட்டனா்.
முன்னாள் ஊராட்சித் தலைவா் ப. சீனிவாசன் தலைமையில் சமூக ஆா்வலா் குழந்தைவேலு, பாசனதாரா் சங்கத் தலைவா் ராஜா, செயலாளா் சிவலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கிளைச் செயலாளா் சண்முகம், காங்கிரஸ் நிா்வாகி ராகுல்காந்தி, அதிமுக செயலாளா் முருகேசன், திமுக நிா்வாகி காசிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இவா்களிடம், வட்டாட்சியா் வடிவழகன், வட்டார வளா்ச்சி அலுவலா் அண்ணாதுரை, குடிநீா் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளா் முருகானந்தம், காவல் ஆய்வாளா் பாரதிதாசன் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். அதன்பேரில் பிற்பகலில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.