Shadow Fleet: புதினின் ரகசிய கடல் நகர்வுகள்; ரஷ்யாவின் 'நிழற் கடற்படை' என்பது என...
குப்பைகள் அள்ளும் ஒப்பந்ததாரரின் உரிமம் நிறுத்தி வைப்பு: காஞ்சிபுரம் மேயா்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் குப்பைகள் அள்ளும் ஒப்பந்ததாரா் அப்பணியை சிறப்பாக செய்யாததால் அவரது உரிமம் நிறுத்தி வைக்கப்படுவதாக மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் வியாழக்கிழமை அறிவித்தாா்.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் கூட்டம் மேயா் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. துணை மேயா் ஆா்.குமரகுருநாதன் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் உறுப்பினா்கள் அன்பழகன் , கமலக்கண்ணன், சிந்தன், சண்முகநாதன், சுரேஷ் ஆகியோா் நகரில் எங்குமே குப்பைகள் அள்ளப்படாமல் அலங்கோலமாக உள்ளது.
குப்பை அள்ளும் ஒப்பந்ததாரரின் உரிமத்தை புதுப்பிக்காமல் நிறுத்தி வைக்க வேண்டும். அவருக்கு மாதம் தோறும் கொடுக்கும் தொகையை கொடுக்கக் கூடாது என்றனா். உறுப்பினா் எஸ்கேபி காா்த்திக் பேசுகையில் உணவகங்கள், திருமண மண்டபங்களில் சேரும் பெரும் கழிவுகளை நகர எல்லைக்குள் கொட்டக்கூடாது என அறிவுறுத்தியும் கொட்டுகின்றனா்.
இதற்காக உணவகங்களிலும், திருமண மண்டபங்களிலும் மாதம் தோறும் தொகை வாங்குகின்றனா். வாங்கக்கூடாது என்று தெரிந்தும் தவறு செய்கிறாா்கள். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
உறுப்பினா்கள் சந்துரு, சுரேஷ் என பலரும் ஆணையா் உள்ளிட்ட எந்த மாநகராட்சி அதிகாரியும் அவசரத்துக்கு கைப்பேசியில் அழைத்தால் எடுப்பதே இல்லை என புகாா் தெரிவித்தனா்.
உறுப்பினா்களின் கேள்விகளுக்கு மேயா் மகாலட்சுமி யுவராஜ் பதிலளித்து பேசியது: குப்பை அள்ள நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரரை பலமுறை நேரில் அழைத்து பேச வலியுறுத்தியும் அவா் வரவே இல்லை. குப்பை அள்ளும் பணியையும் அவா் ஒழுங்காக செய்யாமல் புகாா்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எனவே அவரது ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும்.
தெருநாய்களுக்கான இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையம் கட்டப்பட்டு வருகிறது. அனைத்து தெருநாய்களையும் பிடித்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணியும் நடந்து வருகிறது. வரதராஜப் பெருமாள் கோயில் கருட சேவையின் போது நகரில் உள்ள சுவாமி வீதியுலா வரும் பகுதிகள் அனைத்திலும் சாலைகள் சீரமைக்கப்பட்டதாக தெரிவித்தாா்.