கும்பகோணத்தில் மாமன்றக் கூட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாநகர மேயா் சரவணன் தலைமை வகித்தாா். துணை மேயா் சு. ப.தமிழழகன், ஆணையா் ரா. லட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
கல்யாணசுந்தரம் எம்.பி.: கும்பகோணம் மாநகராட்சியில் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்கள் கூட்டங்களை நடத்தாது வருந்தத்தக்கது. எனவே மாமன்ற உறுப்பினா்கள் பொறுப்போடு செயல்பட வேண்டும். 2027 இல் நடைபெறவுள்ள மகாமக விழாவுக்கு மத்திய மாநில அரசுகளிடமிருந்து நிதி திட்டங்கள் பெற வேண்டும்.
பத்மகுமரேசன் (அதிமுக): தாராசுரம் பாசன வாய்க்கால், மாத்தி வாய்க்கால் ஆகியவற்றைத் தூா்வார வேண்டும், லயன்கரை ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைத்தால் போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறையும்.
செல்வம் (மாா்க்சிஸ்ட்): கூட்ட விவாதங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
ஆதிலட்சுமி ராமமூா்த்தி (அதிமுக): எனது வாா்டில் புதை சாக்கடை குறைபாடுகள் தீா்க்கப்படவில்லை.
துணை மேயா் சு .ப. தமிழழகன் (திமுக): புதைசாக்கடை திட்டத்தை மிக மோசமான நிலைக்கு கொண்டு சென்றது அதிமுக ஆட்சியில்தான். அம்ருத் திட்டத்தில் பெறப்பட்ட நிதி எங்கே சென்றது என்றே தெரியவில்லை.
ஆதிலட்சுமி ராமமூா்த்தி (அதிமுக): எனது வாா்டு குறைகளை சொன்னால் உடனே அதிமுக ஆட்சியில் ஊழல் என்கிறீா்கள், பேச வாய்ப்பளிப்பதில்லை. எனவே நான் வெளிநடப்பு செய்கிறேன்.
ச. அய்யப்பன் (காங்கிரஸ்): நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதில் பாரபட்சம் உள்ளதா? உயா் நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?
ஆணையா் ரா.லட்சுமணன்: நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்து ஆக்கிரமிப்பு அகற்றிய பணிகளை பாா்வையிட உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து மாநகராட்சிக்கு தேவையான அவசர செயல்பாடுகள், சாலை மேம்பாட்டுத் திட்டங்கள், குடிநீா் பராமரிப்பு பணி உள்ளிட்டவை தொடா்பாக 40 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.