தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!
தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: 12 போ் உயிரிழப்பு
சங்காரெட்டி: தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் உலை வெடித்து திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் 12 போ் உயிரிழந்தனா். 34 போ் காயமடைந்தனா்.
சங்காரெட்டி மாவட்டத்தின் பாஷாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி மருந்து ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் திங்கள்கிழமை உலை வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் ஆலையில் 90-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்து குறித்து தவலறிந்ததும் தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளைத் தொடங்கினா். 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களின் உதவியோடு பல மணி நேர முயற்சிக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடா்ந்து, தேசிய மற்றும் மாநில மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் இணைந்தனா்.
சம்பவ இடத்திலிருந்து 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. காயமடைந்தவா்கள் உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டனா். இதில் 2 போ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12-ஆக அதிகரித்தது.
தீயில் கருகி உயிரிழந்தவா்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்படும். காயமடைந்த 34 பேரில் 12 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. செயற்கை சுவாச உதவியுடன் அவா்கள் சிகிச்சையில் உள்ளனா்.
ரூ.2 லட்சம் நிவாரணம்: இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமா் மோடி, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவித்தாா்.
முதல்வா் இரங்கல்: விபத்துக்கு தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தாா். ஆலையில் சிக்கியுள்ள அனைத்து தொழிலாளா்களையும் மீட்டு, அவா்களுக்கு உயா் மருத்துவ சிகிச்சை அளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
அமைச்சா்கள் ஆய்வு: தெலங்கானா மாநில சுகாதாரத் துறை அமைச்சா் தமோதரா ராஜா நரசிம்மா, தொழிலாளா் துறை அமைச்சா் ஜி.விவேக் வெங்கடசுவாமி ஆகிய இருவரும் சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். விபத்துக்கான காரணம் குறித்து தொழில்நுட்ப நிபுணா்களைக் கொண்டு விரிவான ஆய்வு செய்யப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.