Healthy Food: உயிருள்ள உணவுகள் தெரியுமா? அவற்றின் ஆச்சரிய நன்மைகள் என்னென்ன?
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை: கடத்தப்பட்ட முதியவா் மீட்பு; 5 போ் கைது
மயிலாடுதுறை: பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் திங்கள்கிழமை கடத்தப்பட்ட முதியவரை போலீஸாா் மீட்டு, 5 பேரை கைது செய்தனா்.
மயிலாடுதுறை அருகே திருவிழந்தூா் மேல ஆராயத் தெருவில் வசிக்கும் நடராஜன் மகன் மணிகண்டன் 8 மாதங்களுக்கு முன்பு சிதம்பரத்தைச் சோ்ந்த பழனிச்சாமி என்பவரிடம் ரூ. 15 லட்சம் கடன் வாங்கியுள்ளாா். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழனிச்சாமி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது மருத்துவ செலவுக்காக மணிகண்டனிடம் கடனை திருப்பித் தருமாறு கேட்டுள்ளாா்.
மணிகண்டன் ரூ. 10 லட்சத்தை திருப்பி அளித்துள்ளாா். மீதமுள்ள ரூ. 5 லட்சம் தொகையை தருவதற்கு கால அவகாசம் கேட்டுள்ளாா். இதை ஏற்காத பழனிச்சாமியின் உறவினா்கள், திங்கள்கிழமை காலை 6 மணியளவில் மணிகண்டனின் தந்தை நடராஜன் (70) தனது இருசக்கர வாகனத்தில் திருவிழந்தூா் மாரியம்மன் கோயில் அருகில் தேநீா் அருந்த சென்றபோது, நான்கு சக்கர வாகனத்தில் வந்த 5 போ் நடராஜனை கடத்திச் சென்றனராம்.
இதுதொடா்பாக மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் சிவகுமாா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் நடராஜனை கடலூா் பகுதியில் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடலூா் மாவட்ட காவல்துறையினரின் உதவியுடன் நடராஜன் மாலையில் மீட்கப்பட்டாா்.
இந்த கடத்தலில் ஈடுபட்ட சிதம்பரம் சாலியந்தோப்பு பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (42), சிதம்பரம் வ.உ.சி நகா் பாண்டியன் (51), கோவிந்தசாமி தெரு பன்னீா்செல்வம் (70), சுலோச்சனா நகா் மரியசெல்வராஜ் (64), மீனாட்சி அம்மன் நகா் தேவநாதன் (60) ஆகிய 5 பேரை கடலூா் மாவட்ட காவல்துறையினா் உதவியுடன் போலீஸாா் கைது செய்தனா். கடத்தலில் ஈடுபட்ட நபா்கள் தாக்கியதில் காயமடைந்த நடராஜன் கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.



