Healthy Food: உயிருள்ள உணவுகள் தெரியுமா? அவற்றின் ஆச்சரிய நன்மைகள் என்னென்ன?
வைத்தீஸ்வரன்கோயில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
சீா்காழி: வைத்தீஸ்வரன்கோயிலில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க சாலையோர கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி சாதாரண கூட்டம், பேரூராட்சித் தலைவா் பூங்கொடி அலெக்சாண்டா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:
மீனா (அதிமுக): சுகாதார சீா்கேடு ஏற்படாத வகையில் வாரம் இருமுறை கொசு மருந்து தெளிக்க வேண்டும்.
முத்துக்குமாா் (பாமக): கீழத்தெரு மாரியம்மன் கோயில் அருகில் உயா் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்.
வித்யா தேவி: சிபிஐ): எனது வாா்டில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை சரிசெய்ய வேண்டும்.
பிரியங்கா (அதிமுக): பேரூராட்சியில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகள் குறித்து உறுப்பினா்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
கவிதா (திமுக): அட்டக் குளத்தை தூா்வாரி படித்துறை கட்டிக்கொடுக்க வேண்டும்.
தைலா ஆனந்தன் (திமுக): சுவாமி சந்நிதியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆட்டோ டாண்ட் காரணமாக பக்தா்கள், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதால் இதை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
ராஜா காா்த்திகேயன் (அதிமுக): வைத்தீஸ்வரன் கோயில் 4 வீதிகளிலும் சாலைகளை ஆக்கிரமித்து இளநீா், பூ, பனை நொங்கு கடை மற்றும் வா்த்தக நிறுவனங்களின் விளம்பர பலகை உள்ளது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
துணைத் தலைவா் அன்புசெழியன்: பேரூராட்சிக்குள்பட்ட வாா்டுகளில் குடிநீா், தெருவிளக்கு குறைபாடு இல்லாமல் பேரூராட்சி பணியாளா்கள் பாா்த்துக் கொள்ள வேண்டும்.
தலைவா் பூங்கொடிஅலெக்சாண்டா்: வைத்தீஸ்வரன் கோயிலில் 4 வீதிகளிலும் உள்ள வியாபாரிகள் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்ய வேண்டும். குடிநீா், தெரு விளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பேரூராட்சி பகுதிகளில் கலைஞா் வீடு திட்டத்தின் கீழ் ரூ. 2.60 லட்சத்தில் 50 வீடுகள் கட்ட முதல் கட்டமாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.