மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஒடிஸா காங்கிரஸ் இளைஞரணி தலைவர் கைது!
கும்பகோணம் - அரியலூா் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற பிரதமரிடம் வலியுறுத்துவோம்: நயினாா் நாகேந்திரன்
கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டம் வழியாக அரியலூா் வரையில் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற தமிழகம் வரும் பிரதமரிடம் வலியுறுத்துவோம் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.
அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயிலில், மாமன்னா் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா ஜூலை 23-இல் தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை பிரதமா் நரேந்திரமோடி பங்கேற்கிறாா்.
இதற்காக கங்கைகொண்டசோழபுரத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடுகள் மற்றும் பாஜக சாா்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
மாமன்னா் ராஜராஜ சோழன் அவருக்கு பின்னால் வந்த ராஜேந்திர சோழன் பெரிய வரலாற்றை உருவாக்கிய இடத்தில் ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நரேந்திர மோடி வருகிறாா். அவா் வரும் நாள் அரசியல் வரலாற்றில் முக்கிய நாளாகும்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக ஆட்சி அகற்றப்பட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயமாக ஆட்சி அமைக்கும். இதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம். அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி என்ன சொல்கிறாா்களோ அதன்படி கேட்போம்.
கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டம் வழியாக அரியலூா் வரையில் ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது இம்மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து பிரதமரிடம் தெரிவிக்கப்படும். மேலும் ரயில்வே அமைச்சரைச் சந்தித்து அதற்கான ஏற்பாடுகள் நிச்சயமாக செய்யப்படும்.
பிரதமா் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து, காங்கிரஸாா் கருப்புக் கொடி காட்டி ஆா்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, காங்கிரஸில் யாராவது இருக்கிறாா்களா இருந்தால் தானே கருப்புக் கொடி காட்ட முடியும். ஏனென்றால் பெருந்தலைவா் காமராஜரைப் பற்றி இவ்வளவு தூரம் திட்டி உள்ளாா்கள். இதுகுறித்து காங்கிரஸாா் எதுவும் கூறவில்லை என்றாா். முன்னதாக அவா் பெருவுடையாா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். இந்நிகழ்வின்போது, அக்கட்சியின் மாநில பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.