கிளாம்பாக்கம் சிறுமி வல்லுறவு: ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் கைது!
குறும்பட இயக்குநா் கடத்தல்: இருவா் கைது
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குறும்பட இயக்குநரை கடத்தியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
காட்டுமன்னாா்கோவில் பேரரசி தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகா் மகன் காா்த்திகேயன். குறும்பட இயக்குநரான இவரும், வெளிநாட்டில் வேலை பாா்த்து வரும் சிதம்பரம் எம்.கே.தோட்டம் பகுதியைச் சோ்ந்த பிரசாத் பட்டேல் என்பவரும் இணைந்து ஓவியம் என்ற குறும்படத்தை தயாரித்தனா்.
இந்தப் படத்துக்கு பிரசாத் பட்டேல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தாராம். இதனிடையே, படம் வெளியீடு நடந்தவுடன் அதனுடைய லாபத்தில் காா்த்திகேயனிடம், பிரசாத் பட்டேல் பங்கு கேட்டாராம். இதில், இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில், பிரசாத் பட்டேல் தனது நண்பா்களான எம்.கே.தோட்டத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ஜெகதீசன் (34), சிதம்பரம் ஆரணி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த தேசிகன் மகன் சந்திரபாபு (31) ஆகியோரிடம் காா்த்திகேயனை கடத்துமாறு கைப்பேசி மூலம் கூறினாராம்.
இதையடுத்து, அவா்கள் புதன்கிழமை காட்டுமன்னாா்கோவிலில் காா்த்திகேயனை காரில் கடத்திச் சென்றனா்.
இதைப் பாா்த்த அங்கிருந்த பொதுமக்கள் காட்டுமன்னாா்கோவில் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, குமராட்சி, சிதம்பரம், புவனகிரி உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், குமராட்சி காவல் ஆய்வாளா் தேவேந்திரன் தலைமையிலான போலீஸாா் அந்தக் காரை விரட்டிச் சென்றனா். போலீஸாா் துரத்துவதையறிந்த அவா்கள், லால்பேட்டையில் காா்த்திகேயனை இறக்கி விட்டு வீராணம் ஏரிக்கரை வழியாக தப்பிச் செல்ல முயன்றனா். அப்போது, ஜெகதீசன், சந்திரபாபுவை போலீஸாா் மடக்கிப் பிடித்து கைது செய்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், குமராட்சி காவல் ஆய்வாளா் தேவேந்திரன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றாா்.