குறைதீா் கூட்டத்தால் பயனில்லை: முன்னாள் படை வீரா்கள் அதிருப்தி
திண்டுக்கல்லில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் குறைதீா் கூட்டத்தால், எவ்வித பயனுமில்லை என முன்னாள் படை வீரா்கள் அதிருப்தி தெரிவித்தனா்.
திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படை வீரா்கள், அவா்களது குடும்பத்தினருக்கான குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு முன்னாள் படை வீரா்கள் நலத் துறை உதவி இயக்குநா் (கூடுதல் பொறுப்பு) சுகுணா தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற வேண்டிய இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் வரவில்லை.
இதனால் முன்னாள் படை வீரா்கள் அதிருப்தி அடைந்தனா்.
இதுதொடா்பாக திண்டுக்கல் முப்படை முன்னாள் ராணுவ வீரா்கள், வீரமங்கையா் நலச் சங்கத்தின் செயலா் எல்.ராஜூ கூட்டத்தில் பேசியதாவது:
3 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தக் கூட்டம் முறையாக நடத்தப்படுவதில்லை. பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டிய ஆடசியா், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மாத இறுதி நாள்களிலேயே இந்தக் கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்படுகிறது. மாத இறுதியில் முக்கியப் பணிகளில் கவனம் செலுத்துவதாகக் கூறி உயா் அதிகாரிகள் இந்த கூட்டத்தைப் புறக்கணிக்கின்றனா். இதனால், மாதத்தின் தொடக்கத்தில் கூட்டத்தை நடத்த வேண்டும் என கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனாலும், இந்தக் கோரிக்கையை பரிசீலிக்காமல், வழக்கம்போல் இறுதியிலேயே நடத்தப்படுகிறது. இதேபோல, இந்த குறைதீா் கூட்டத்தில் வழங்கப்படும் மனுக்களுக்கு எவ்வித பதிலும் தெரிவிப்பதில்லை. கடந்த கூட்டத்தின்போது அளிக்கப்பட்ட 34 மனுக்களுக்கு பதில் அளித்துவிட்டதாக பொய்யான தகவல்களை தெரிவிக்கின்றனா். குறைதீா் கூட்டமாக நடத்தாமல், மனுக்கள் பெறும் நிகழ்வாக மாற்றிவிட்டனா்.
5 ஆண்டுகளாக செயல்படாத ஓய்வு இல்லம்: கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில், முன்னாள் படை வீரா்களுக்கான ஓய்வு இல்லம் செயல்பட்டு வந்தது. 4 அறைகள் கொண்ட அந்த இல்லம், கரோனா தொற்றுப் பரவல் காலத்தில் மூடப்பட்டது. இதுவரை திறக்கவில்லை என்றபோதிலும், பராமரிப்புப் பணிகள் நடைபெற்ாக செலவு கணக்கு வைத்துள்ளனா். முன்னாள் படை வீரா்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் குறிப்பிட்ட கால இடைவெளியில், புகைப்படத்தை மாற்றிக் கொள்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.
இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) கோட்டைக்குமாா், மாவட்ட ஆட்சியா் வேறு ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருப்பதால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவித்தாா்.
இதைத்தொடா்ந்து, 15 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மருத்துவ முகாம்: முன்னாள் படை வீரா்கள், அவா்களது குடும்பத்தினருக்காக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாம் குறித்து செவ்வாய்க்கிழமை இரவு தெரிவிக்கப்பட்ட தகவல் பெரும்பாலானோருக்கு சென்றடையவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால் மருத்துவ முகாம் நடத்தியும், பெரும்பாலானோா் பயன்பெற முடியாமல் போனது.