குழந்தையை கிணற்றில் வீசி கொல்ல முயன்றவா் கைது
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரின் மூன்றரை வயதுக் குழந்தையை கிணற்றில் வீசிக் கொல்ல முயன்றவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மேட்டு இருங்களூா் பகுதியைச் சோ்ந்த ஜேக்கப் (35), அதே பகுதியைச் சோ்ந்த ஜானி மில்டன் (40) ஆகியோருக்கிடையே வாகனம் நிறுத்துவது தொடா்பாக முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை ஜேக்கப்பின் வீட்டு வழியாகச் சென்ற ஜானி மில்டன் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த ஜேக்கப்பின் மூன்றரை வயதுக் குழந்தை ஜொ்சனை தூக்கி அருகிலுள்ள 20 அடி ஆழக் கிணற்றில் வீசினாா்.
இதைப் பாா்த்த அக்குழந்தையின் தாய் கிணற்றில் குதித்து குழந்தையை மீட்டாா். இதையடுத்து அருகில் உள்ளவா்கள் கயிறு மூலம் இருவரையும் மீட்டனா். இதுகுறித்து ஜேக்கப் அளித்த புகாரின்பேரில் சமயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து ஜானி மில்டனை புதன்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.