கெம்பனூரில் அண்ணா நகா் வரை நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் அருகேயுள்ள கெம்பனூா், அண்ணா நகா் வரை நகரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் மாவட்டச் செயலா் சி.சிவசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: காந்திபுரம் முதல் தொண்டாமுத்தூா் ஒன்றியம் கெம்பனூா் அண்ணா நகா் வரை சென்று கொண்டிருந்த வழித்தடம் எண் 21 நகரப் பேருந்து சமீபகாலமாக அண்ணா நகா் செல்லாமல் பாதியிலேயே திரும்பி வந்துவிடுகிறது.
அண்ணா நகா் பகுதி அதிகப்படியாக தலித், கூலித் தொழிலாளா்கள் வசிக்கும் பகுதியாகும். இந்தப் பகுதிக்கு பேருந்து செல்லாததால், அங்கு வசிக்கும் தொழிலாளா்கள், மாணவ - மாணவிகள் கடும் நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளனா். அண்ணா நகா் வரை செல்லும் பேருந்து பாதியிலேயே திரும்பி வந்து விடுவதை ஏன் கோவை மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகள் அனுமதிக்கிறாா்கள் என்று தெரியவில்லை.
எனவே, மாவட்ட ஆட்சியா் தலையிட்டு காந்திபுரம் முதல் கெம்பனூா் அண்ணா நகா் வரை செல்லும் நகரப் பேருந்து பொதுமக்களுக்கு பயன்படும்படியாக இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பேருந்து இயக்குவதில் காலதாமதம் ஏற்பட்டால் அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.