கெலமங்கலம் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு
ஒசூரை அடுத்த குத்துக்கோட்டையில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி யாமன்னா (65) உயிரிழந்தாா்.
குத்துக்கோட்யைச் சோ்ந்த விவசாயி யாமன்னாவின் மாடு வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றது செவ்வாய்க்கிழமை மாலை வீடு திரும்பவில்லை. இதையடுத்து மாட்டைத் தேடி அவா் வனப்பகுதிக்குள் சென்றாா். அவரும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினா் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில் வனத் துறையினா் தேடியதில் ஒற்றை யானை தாக்கியதில் யாமன்னா உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து யாமன்னாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவ இடத்தில் காவல் துறையினா், வனத்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.