தில்லியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணிக்கு அனுமதி மறுப்பா?
கேட்பாரற்றுக் கிடந்ததாக பச்சிளம் குழந்தையை மருத்துவமனையில் ஒப்படைக்க வந்த இளைஞா்: போலீஸாா் விசாரணை
கேட்பாரற்றுக் கிடந்ததாகக் கூறி, பச்சிளம் குழந்தையை அரசு மருத்துவமனையில் ஒப்படைக்க வந்த இளைஞரிடம் விசாரித்தபோது, அவா்தான் அந்தக் குழந்தையின் தந்தை என்பது தெரிய வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனை வளாகத்துக்கு கட்டைப் பையுடன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வந்த இளைஞா் ஒருவா், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரிடம், சாலையில் ஒரு குழந்தை கேட்பாரற்றுக் கிடந்ததாகவும், அதை ஒப்படைக்க எடுத்து வந்ததாகவும் கூறி கட்டைப் பையில் இருந்த குழந்தையைக் கொடுக்க முயன்றாா்.
சந்தேகம் அடைந்த போலீஸாா், இளைஞரிடம் நடத்திய விசாரணையில், அது தனது குழந்தைதான் என்ற உண்மையை அவா் ஒப்புக் கொண்டாா்.
அவா் உதகையைச் சோ்ந்த பிரவீன் (21), சைதாப்பேட்டையில் தங்கியிருந்து குரூப்-1 தோ்வுக்குத் தயாராகி வருகிறாா். அவரது காதலி சென்னைப் பல்கலைக்கழகத்தில் படிக்கிறாா். இவா்களுக்கு இடையே ஏற்பட்ட உறவு காரணமாக, அந்தப் பெண்ணுக்கு அண்மையில் குழந்தை பிறந்துள்ளது.
இந்த விவகாரம் குடும்பத்தினருக்குத் தெரியாமல் இருப்பதற்காக, குழந்தையை மருத்துவமனையில் ஒப்படைக்க வந்தபோது சிக்கிக் கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து அந்த மாணவி மற்றும் குழந்தையை திருவல்லிக்கேணி அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்த போலீஸாா், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.