யுபிஐ மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.2,000-தான் பரிமாற்றம் செய்ய முடியுமா? இல்லை!
கையில் ஏர் கன்னுடன் வீடுகளில் திருட நோட்டமிட்ட இளைஞர்கள்; மடக்கிப் பிடித்த பொதுமக்கள்- என்ன நடந்தது?
வீடுபுகுந்து திருடுவதற்கு ஏர் கன்னுடன் சுற்றிவந்த இளைஞரை பிடித்து கிராம மக்கள் போலீஸில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பானங்குளத்தில் சந்தேகப்படும்படி இளைஞர்கள் இருவர் டூவீலரில் சுற்றிக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்த கிராம மக்கள் அவர்களை மடக்கி விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் மேலும் சந்தேகமடைந்த கிராமத்தினர், அவர்கள் வைத்திருந்த பையை திறந்து காட்டுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட இளைஞர்களில் ஒருவர் கிராம மக்களின் பிடியில் இருந்து தப்பி ஓடினார்.

மற்றொருவர் தப்பி ஓட முயலும்போது வளைத்து பிடித்த பொதுமக்கள் இதுபற்றி காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலை தொடர்ந்து விரைந்து வந்த கிருஷ்ணன்கோவில் போலீஸார், பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பிடிபட்ட நபர் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது 34) என தெரியவந்தது. தப்பி ஓடிய இளைஞர் ராமநாதபுரத்தை சேர்ந்த ஆரோக்கியஜான் என்பதும், இருவரும் அப்பகுதியில் வீடுகளில் திருடும் நோக்கத்திற்காக டூவீலரில் நோட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ராஜேஷ் வைத்திருந்த உடமைகளை சோதனை செய்ததில் 'ஏர் கன்' மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இருவர் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டதில், பிடிபட்ட ராஜேஷ் மீது 15-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும், திருட்டு வழக்கில் கைதாகி சேலம் சிறையில் இருந்தபோது ஆரோக்கிய ஜான் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பேரில் இருவரும் நட்பாகி திருடுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராஜேஷை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து 'ஏர் கன்' பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய ஆரோக்கிய ஜானை தீவிரமாக தேடிவருகின்றனர்" என்றனர்.