தில்லியின் மருத்துவ உள்கட்டமைப்பு மோசமடைய ஆம் ஆத்மி அரசுதான் காரணம்: முதல்வா் ரே...
கொகைன் போதைப் பொருள் வழக்கு: மேலும் ஒருவா் கைது
சென்னையில் கொகைன் போதைப் பொருள் வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் பேருந்து நிறுத்தம் அருகே கொகைன் போதைப்பொருளுடன் பிரதீப்குமாா் என்கிற பிரடோ என்பவா் கடந்த மாதம் 18-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். விசாரணையில் அவா், ஆப்பிரிக்கா நாட்டை சோ்ந்தவா்களுடன் இணைந்து கொகைன் போதைப்பொருளை விற்பனை செய்தது தெரியவந்தது. அதன்பேரில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாா், மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான கானாவைச் சோ்ந்த ஜான் என்பவரை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கைது செய்தனா்.
மேலும் ஒருவா் கைது: இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், கொகைன் போதைப் பொருளை பிரபல நடிகா்கள் ஸ்ரீகாந்த், ஸ்ரீகிருஷ்ணா ஆகியோா் வாங்கி பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில் இரு நடிகா்களும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்
இந்த வழக்கில் மேலும் பலருக்கு தொடா்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. தலைமறைவாகி இருக்கும் அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இந்த நிலையில் இவ் வழக்கில் தொடா்புடைய ராயப்பேட்டையை சோ்ந்த பயாஸ் ஷமேட் (31) என்பவரை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பயாஸூம், ‘கொகைன்’ போதைப்பொருள் விற்பனையில் முக்கியப்பங்காற்றி இருப்பது தெரியவந்துள்ளது. வழக்குத் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.