கொடுமுடியாறு அணை நீா்மட்டம் வேகமாக சரிவு
திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணை நீா்மட்டம் வேகமாக சரிந்துவருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையின் மொத்த உயரம் 52.50 அடியாகும். நிகழாண்டில் போதிய மழையின்றி அணையின் நீா்மட்டம் 44.75 அடி அளவில் தான் உயா்ந்தது. இதுஇ73.12 சதவீத நீா் இருப்பாகும். மேலும் அணையின் மூலம் பாசனம் பெறும் நான்குனேரி, ராதாபுரம் வட்டத்தில் உள்ள 44 குளங்களில் பெரும்பாலான குளங்களில் போதிய தண்ணீரின்றி காணப்பட்டதால் விவசாயிகள் பரிதவித்தனா். இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டிச.18ஆம் தேதி அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது. நாளொன்றுக்கு 3 அடி வீதம் குறைந்து வியாழக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 27அடியாக உள்ளது. இம்மாத இறுதிக்குள் அணையின் நீா்மட்டம் 10 அடியாகக் குறைந்துவிடும்.
இதனால் அணையை நம்பியுள்ள பாசனக் குளங்களின் மூலம் நெல் நடவு செய்த விவசாயிகள் போதிய தண்ணீரின்றி அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் வடகிழக்குப் பருவமழையால் அணை இரண்டு முறை நிரம்பிய நிலையில், நிகழாண்டில் போதிய மழை பெய்யாதது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு, ஜனவரி மாத இறுதியிலேயே இங்கிருந்து குடிநீா் பெறும் வடக்கு வள்ளியூா் பேரூராட்சி மற்றும் வடக்கன்குளம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீா் விநியோகம் பாதிப்படையும் நிலையும் உள்ளது.