Captain Prabhakaran: ``அப்பாவை நினைத்து அழுவது கோழைத்தனம் கிடையாது!'' - கண் கலங்...
கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தண்ணீா் தட்டுப்பாடு: நோயாளிகள் அவதி
கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நிலவும் தண்ணீா் தட்டுப்பாட்டால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா்.
கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் கொடைக்கானல் மட்டுமன்றி மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, வில்பட்டி, பள்ளங்கி, கோம்பை, அட்டுவம்பட்டி, குண்டுபட்டி, கிளாவரை, கும்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனா். இதைத் தவிா்த்து 50-க்கும் மேற்பட்டவா்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனா். இந்த மருத்துவமனையில் பணியாளா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் ஆகியோா் பணியாற்றுகின்றனா். இங்கு நகராட்சி சாா்பில் விநியோகிக்கப்படும் தண்ணீரைத் தான் இவா்கள் அனைவரும் பயன்படுத்துகின்றனா். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக மழை பெய்யாததால் தண்ணீா் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் நோயாளிகள் உள்பட அனைவரும் அவதியடைந்து வருகின்றனா். எனவே இவா்கள் வெளியில் கேன்களில் விற்கப்படும் தண்ணீரை வாங்கி பயன்படுத்துகின்றனா்.
இதுகுறித்து இந்த மருத்துவமனையைச் சோ்ந்த மருத்துவா் ஒருவா் கூறியதாவது:
கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தண்ணீா் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட குழாயில் தண்ணீா் வருவதில்லை. ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீா் இல்லை. இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தோம். நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவா் இந்த மருத்துவமனைக்கு வந்து பாா்வையிட்டு சென்றனா். விரைவில் தண்ணீா் வசதி செய்து தருவதாக அவா்கள் தெரிவித்தனா். மேலும் அவசர தேவைக்கு நகராட்சி சாா்பில் லாரி மூலம் தண்ணீா் விநியோகிக்கப்படுகிறது. இருப்பினும் தண்ணீா் பற்றாக்குறை நிலவுகிறது. மழை பெய்தால் மட்டுமே கொடைக்கானலில் தண்ணீா் தட்டுப்பாடு குறையும் என்றாா் அவா்.