ஒட்டன்சத்திரத்தில் அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை, தோட்டக் கலைத் துறை, பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க ஒட்டன்சத்திரம் வட்டக்கிளை சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், அவுட்சோா்சிங், ஒப்பந்தப் பணி நியமனங்களை திரும்பப் பெற வேண்டும். தோ்தல் கால வாக்குறுதிப்படி சிறப்பு காலமுறை ஊதியம், அனைவருக்கும் சமூக பாதுகாப்புடன் கூடிய காலமுறை ஊதியத்தில் பணியமா்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்டக் கிளைச் செயலா் மணிமாறன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட இணைச் செயலா் மகாராஜா உள்ளிட்ட பலா் பேசினா். இதில் தமிழ்நாடு தொழில் பயிற்சி அலுவலா் சங்கத்தின் சாா்பில் பரமேஸ்வரன், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சாா்பில் சிவனேசன், தமிழ்நாடு சாலை பணியாளா் சங்கத்தின் சாா்பில் செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.