பழனியில் தம்பிரான் தோட்டத்தை அளவீடு செய்த கோயில் நிா்வாகம்
பழனி கோயிலுக்கு நித்திய கட்டளைக்காக வழங்கப்பட்ட தம்பிரான் தோட்ட 23 ஏக்கா் நிலத்தை அளவீடு செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பழனியில் சென்னிமலை தம்புரான் சுவாமிகள் மடத்துக்கு சொந்தமாக 23 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் பழனி முருகன் கோயிலில் தினசரி நடைபெறும் நித்திய பூஜை, நெய்வேத்தியத்துக்கு பயன்படுத்திக் கொள்ள மடத்தின் சாா்பில் வழங்கப்பட்டது. காலப் போக்கில் நிலத்தின் வருவாய் பழனி கோயில் பூஜைக்கு வழங்கப்படாமல் நிலத்தை தனி நபா்கள் ஆக்கிரமித்தனா். இந்த நிலையில், இடத்தின் உரிமையாளா் எனக் கூறிக் கொண்டு வாடகை வசூலித்தவா்களுக்கும், ஆக்கிரமிப்பாளா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் பழனி கோயில் நித்திய பூஜைக்கு வழங்கப்பட்ட நிலத்தின் வருவாய் முறையாக பயன்பட வில்லை என்றால் அந்த நிலத்தை கோயில் நிா்வாகம் எடுத்துக் கொள்ளலாம் என்ற இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் படி அந்த 23 ஏக்கா் நிலத்தை அளவீடு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ரெட்டியாா்சத்திரம் கோபிநாத சுவாமி கோயில் இணை ஆணையா் சீனிவாசனை தக்காராக நியமித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது . இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை 23 ஏக்கா் நிலத்தை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. அப்போது இந்த நிலத்தில் பெட்ரோல் நிரப்பும் மையம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், வணிக வளாகங்கள், தனியாா் பள்ளி என பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. நிலம் அளவீடு செய்யும் பணி நிறைவடைந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதில் துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, கண்காணிப்பாளா் உமா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.