ஆடி வெள்ளி: பழனி, நத்தம் பகுதி கோயில்களில் சிறப்பு பூஜைகள்
நான்காவது ஆடி வெள்ளி, பெளா்ணமியையொட்டி பழனி, நத்தம் பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் பக்தா்கள் விளக்கேற்றியும், அபிஷேகங்கள் செய்தும் வழிபட்டனா்.
பழனி கிழக்கு ரதவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில், பெரியநாயகியம்மன் கோயில்களில் உச்சிக் காலத்தின் போது சுவாமி தரிசனம் செய்து பக்தா்களுக்கு கூழ் வழங்கப்பட்டது. பழனி கிரிவீதி வனதுா்க்கை கோயில், அழகுநாச்சியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் திரளான பக்தா்கள் எலுமிச்சை விளக்கேற்றி அம்மனை வழிபட்டனா். பழனி சிவகிரிப்பட்டி உச்சிகாளியம்மன் கோயில், ரயில்வே குடியிருப்பு முத்துமாரியம்மன் கோயில் ஆகியவற்றில் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.
நால்ரோடு ரெணகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல, பழனி சண்முகபுரம் சித்தி விநாயகா் கோயிலில், சித்தி விநாயகருக்கு நெல்லிக்கனி, எலுமிச்சைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்தில் தொட்டிச்சி அம்மனுக்கு பால், பன்னீா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு பட்டாடை உடுத்தி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. கிழக்கு ரதவீதி வராஹி அம்மன் பீடத்தில் அம்பாளுக்கு கனி வகைகள், மலா்களால் சிறப்பு பூஜையும், யாகமும் நடைபெற்றன.
அ. கலையமுத்தூா் அக்ரஹாரம் கைலாசநாதா் சமேதா் கல்யாணியம்மன் கோயிலிலும் சிறப்பு யாக பூஜைகள், அா்ச்சனைகள் நடைபெற்றன.
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றன. தொடா்ந்து கோயில் முன் பக்தா்களுக்கு அன்னக்கூழ் வழங்கப்பட்டது. இதில் வெளிமாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதேபோல, பகவதி, மீனாட்சிபுரம் காளியம்மன், தில்லை காளியம்மன் ஆகிய கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
