கொடைரோடு அருகே குடமுழுக்கு
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள நாகையகவுண்டன்பட்டி ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீபகவதியம்மன், ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக காசி, ராமேசுவரம், காவிரி, கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீா் மேள தாளம் முழங்க ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடா்ந்து, ஆறு கால யாக சாலை பூஜைகள், சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா், கடம் புறப்பாடு நிகழ்ச்சியை அடுத்து, சிவாசாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க, ராஜ கோபுரக் கலசத்துக்கு புனித நீரூற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது. அப்போது, பக்தா்கள் ஓம் சக்தி பராசக்தி என முழக்கங்களை எழுப்பினா். இதில் திண்டுக்கல், மதுரை, கோயம்புத்தூா், சென்னை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான புத்தா்கள் கலந்து கொண்டனா். பின்னா், அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அம்மையநாயக்கனூா் பேரூராட்சி மன்றத் தலைவா் எஸ்.பி.எஸ். செல்வராஜ், விழாக் குழுவினா், ஊா்ப் பொதுமக்கள் செய்தனா்.
