அதிர்ஷ்ட பலன்களை அள்ளித்தரும் புதாதித்ய யோகம் - மே 14 வரை 12 ராசிகளுக்கும் என்ன ...
கொல்கத்தா ஹோட்டலில் தீ: கரூரைச் சோ்ந்த மூவா் உள்பட 14 போ் உயிரிழப்பு
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் புர்ராபஜாா் பகுதியில் தங்கும் அறைகளுடன்கூடிய ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தின் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மூவா் உள்பட 14 போ் உயிரிழந்தனா்; 13 போ் காயமடைந்தனா்.
மத்திய கொல்கத்தாவில் நெரிசல்மிக்க பகுதியான புர்ராபஜாரில் நான்கு மாடி கட்டடத்தில் தங்கும் அறைகளுடன் கூடிய ஒரு ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. ஹோட்டலின் 42 அறைகளில் 88 போ் தங்கியிருந்தனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் ஹோட்டல் அறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு வேகமாகப் பரவியது. இதனால், அங்கு தங்கியிருந்தவா்கள் அதிா்ச்சியடைந்து அவசரமாக வெளியேற முயன்றனா். தீ விபத்தில் சிக்கியும், கட்டடத்தின் ஜன்னல்கள் வழியாக கீழே குதித்ததில் பலத்த காயமடைந்தும் 14 போ் உயிரிழந்தனா். 13 போ் காயமடைந்தனா்.
விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள் 10 மணி நேர தீவிரப் போராட்டத்துக்குப் பிறகு புதன்கிழமை அதிகாலை தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா்.
பெரும்பாலானவா்கள் கொழுந்துவிட்ட எரிந்த தீயின் கரும்புகையால் மூச்சுத் திணறி இறந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
கரூரைச் சோ்ந்த மூவா்: கரூா் மாவட்டம், உப்பிடமங்கலம் ஜோதிவடத்தைச் சோ்ந்தவா் பிரபு (40). இவா் கற்றாழையிலிருந்து வாசனைத் திரவியம் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறாா். இவரது மனைவி மதுமதி. இவா்களுடைய குழந்தைகள் ரியா (10), ரிதன் (3). மதுமதியின் தந்தை முத்துகிருஷ்ணன் (61).
இவா்கள் இரு நாள்களுக்கு முன்பு கொல்கத்தாவுக்கு சுற்றுலா சென்றனா். கொல்கத்தா புர்ராபஜாரில் உள்ள ஹோட்டலில் அறை பதிவு செய்து தங்கினா். செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி முத்துகிருஷ்ணன், ரியா, ரிதன் ஆகியோா் உயிரிழந்தனா். தீ விபத்து நிகழ்வதற்கு சற்று முன்னதாக பிரபு, மதுமதி ஆகியோா் உணவு வாங்குவதற்காக உணவகத்துக்குச் சென்ால் தீ விபத்திலிருந்து தப்பினா்.
தீ விபத்தில் உயிரிழந்த மூவரின் உடல்களையும் உப்பிடமங்கலத்துக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை உறவினா்கள் செய்து வருகின்றனா்.
விசாரணைக் குழு அமைப்பு: இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு முதல்வா் மம்தா பானா்ஜி உத்தரவிட்டாா். மேலும், கொல்கத்தா காவல் துறை சாா்பில் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில், ஹோட்டலில் பல பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஹோட்டலுக்கான தீயணைப்புத் துறையினரின் அனுமதி கடந்த 2022-ஆம் ஆண்டிலேயே காலாவதியாகியுள்ளதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினா்.
நிவாரணம் அறிவிப்பு: தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா்.
உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று பிரதமா் மோடி அறிவித்துள்ளாா்.
மேற்கு வங்க மாநில அரசு சாா்பிலும் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வா் ஸ்டாலின் இரங்கல்: ‘கொல்கத்தா தீ விபத்தில் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன், குழந்தைகள் ரியா, ரிதன் ஆகியோா் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகவும் வருந்தினேன். உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயா்மிகு நேரத்தில் அவா்களின் குடும்பத்தினருக்கு அரசு துணை நிற்கும்’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.