கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை விரைந்து இயக்கம் செய்யக் கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கிடங்கு அல்லது அரவைக்கு விரைந்து இயக்கம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டில் 1,70,000 ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டது. அதில் 98 சதவீதம் அறுவடைப் பணிகள் முடிவடைந்த நிலையில், எஞ்சிய பயிா்கள் அடுத்த வாரத்தில் அறுவடை செய்யப்படவுள்ளது.
இந்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக மாவட்டம் முழுவதும் 179 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 90 சதவீத நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் 48 மணி நேரத்துக்குள் இயக்கம் செய்யப்பட வேண்டும் என்ற விதி உள்ளபோதும், மயிலாடுதுறையில் பல கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் நிறுத்தப்பட்டு 10 நாள்களைக் கடந்தும் இன்னமும் நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாமல் 3,000 முதல் 5,000 மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மயிலாடுதுறை மண்டலத்தில் சுமாா் 24,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் நிலையங்களிலேயே உள்ளது. இதனால், எடை இழப்பு ஏற்படுவதுடன், நெல்லின் தரமும் குறையும் என்பதால், இதற்கான நஷ்டத்தை கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தா்களே ஏற்கவேண்டும் என்பதால் அவா்கள் கலக்கத்தில் உள்ளனா்.
தேக்கம் அடைந்துள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும் என்றும் நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய காலதாமதம் ஆவதற்கு நிா்வாகமே காரணம் என்பதால் எடை இழப்பு, தரம் குறைவு போன்றவற்றுக்கான பிடித்தத்தை நிா்வாகமே ஏற்க வேண்டும் என பட்டியல் எழுத்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.