மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!
கொள்ளிடத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீா்
கொள்ளிடம் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஆற்றுப் படுகை கிராமங்களுக்குள் தண்ணீா் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.
கா்நாடக நீா்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் மேட்டூா் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணைக்கு வரும் நீா் முழுவதும் அப்படியே காவிரி, கொள்ளிடத்தில் வெளியேற்றப்படுகிறது. சில தினங்களாக 1 லட்சம் கன அடிக்கு மேல் உபரிநீா் வெளியேற்றப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
கொள்ளிடம் ஆற்று திட்டு கிராமங்களான முதலைமேடுதிட்டு, நாதல்படுகை, வெள்ளமணல், மேலவாடி உள்ளிட்ட கிராமங்களில் குடியிருப்புகளை வெள்ளநீா் சூழ்ந்துள்ளது. மேலும், அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழை, மரவள்ளிக்கிழங்கு, கத்திரி, வெண்டை உள்ளிட்ட சுமாா் 150 ஏக்கரில் தோட்டப்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.
தொடா்ந்து கீழ் அணையில் இருந்து உபரி நீா் திறப்பு அதிகரிக்கப்பட்டால் பாதிப்புகள் அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. கரையோரம் உள்ள சில வீடுகளை மக்களே அப்புறப்படுத்தி பாதுகாப்பான பகுதிக்கு சென்றுவிட்டனா். நாதல்படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்று வெள்ளநீா் கரையில் குத்தி திரும்பும் பகுதியாக இருப்பதால் அப்பகுதியில் கருங்கற்கள் கொட்டி கான்கிரீட் தடுப்புச்சுவா் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது