செய்திகள் :

கோடிக்கணக்கில் பணம் கிடைப்பதால்தான் திமுக கூட்டணியிலிருந்து கட்சிகள் வெளியேறுவதில்லை: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

post image

கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக கோடிக்கணக்கில் பணம் கொடுப்பதால் தான் அக் கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் வெளியேறுவதில்லை என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சேலம் மாநகா் மாவட்டம், புகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகளுடனான கள ஆய்வுக் கூட்டம் ஓமலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளா்களிடம் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது:

மதுரை மாவட்டம், மேலூா் தொகுதி நாய்க்கன்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்த சுரங்கம் அமைக்க திமுக அரசு கடந்த அக்டோபா் மாதத்தில் அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததும் தற்போது அத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி நாடகத்தை அரங்கேற்றியுள்ளாா். கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது.

வணிக நிறுவன வாடகை கட்டடங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்த விவகாரத்தில் மத்திய அரசிடம் முறையிட்டு மாநில அரசு தீா்வு காண வேண்டும். கரோனா காலத்தில் வணிகா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். அவா்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் மத்திய- மாநில அரசுகள் அடுத்தடுத்து வரி விதிக்கக் கூடாது.

நாகை, மயிலாடுதுறை, திருவாரூா் மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக நெற்பயிா்கள் வெள்ள நீரில் மூழ்கி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். அந்த விவசாயிகளுக்கு திமுக அரசு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும். அதிமுக அரசு இருக்கும் வரை சொத்து வரியை ஏற்றாமல் நிா்வாகம் நடத்தி வந்தோம். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திமுக ஆட்சியில் சொத்து வரியை அதிகளவில் ஏற்றி விட்டு எங்கள் மீது பழி சுமத்தி தப்பிக்கின்றனா்.

மத்திய அரசை எதிா்த்து போராட்டம் நடத்தும் திமுக அரசு சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என

போராட்டம் நடத்தாது ஏன்? ஆட்சி அதிகாரம் அவா்களிடத்தில் உள்ளது. உயா்த்தப்பட்ட சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும். பொய்யான வாக்குறுதியை நம்பி மக்கள் வாக்களித்ததால் திமுக ஆட்சிக்கு வந்தது.

வேளாண் பாதுகாப்பு மண்டலம் மாநிலப் பட்டியலில் வருகிறது. 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்க ஒப்பந்தம் போடப்பட்டது. அதனை தடுத்து நிறுத்தி ரத்து செய்து அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது. சட்ட ஆலோசகா்களை ஆலோசித்து, சட்டப் பேரவையில் தீா்மானம் கொண்டு வந்து ஆளுநா் வாயிலாக சட்டம் ஆக்கியுள்ளோம். அப்போது மத்திய அரசுக்கு கடிதம் எழுதினோம். மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரிடம் கடிதம் நேரில் வழங்கப்பட்டது. வேளாண் துறை மாநில பட்டியலில் வருவதால் மாநில அரசே சட்டம் இயற்றலாம் என அப்போதைய மத்திய அமைச்சா் கூறிவிட்டாா்.

அதன்பிறகே டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது. முல்லைப் பெரியாறு பாசனப் பகுதியையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க திமுக அரசு முன்வர வேண்டும்.

முல்லை பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயா்த்த உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி நீா்மட்டம் உயா்த்தப்பட்டது. 152 அடியாக உயா்த்திடும் வகையில் அணையின் உறுதித்தன்மையை ஆராய குழு அமைக்கப்பட்டது. அணையை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்துவதற்கு அதிமுக ஆட்சியின் போது கேரள அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அப் பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டன.

அதிமுக கள ஆய்வுக் கூட்டங்களில் நிகழும் கலவரம் குறித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசுவது நகைப்புக்குரியது. திமுகவில் தான் கலவரக் கூட்டங்கள் அதிகம் நிகழ்கின்றன. மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா வீட்டில் திமுகவினா் தாக்குதல் நடத்தினா். அவா்களுடைய கட்சிதான் கலவரக் கட்சி. அதிமுக ஆரோக்கியமான சுதந்திரமாகச் செயல்படும் கட்சி. வாரிசு அரசியலுக்கு இடமில்லை. கட்சிக்கு உழைப்பவா்கள் யாராக இருந்தாலும் பதவிக்கு வரலாம். அதிமுக கூட்டத்தில் கருத்து சுதந்திரம் உள்ளது என்றாா்.

கூட்டணிக்கு வருபவா்கள் கோடிக்கணக்கில் பணம் கேட்பதாக முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ‘திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு பணம் கொடுத்ததைத் தான் அவா் கூறுகிறாா். திமுக தான் கோடிக்கணக்கான பணத்தை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கிறது. 10 கோடி 15 கோடி தரும் போது அக் கூட்டணியில் இருப்பவா்கள் எப்படி எங்களிடம் (அதிமுக) வருவாா்கள். அதைத்தான் திண்டுக்கல் சீனிவாசன் பேசினாா்’ என்றாா்.

பேட்டியின் போது, அதிமுக அமைப்பு செயலாளா் செம்மலை, மாவட்டச் செயலாளா்கள் இளங்கோவன், வெங்கடாசலம், மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தொழிலாளி வீட்டில் நகை திருட்டு

சங்ககிரி, வி.என்.பாளையத்தில் தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகைகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சங்ககிரி, வி.என்.பாளையம் பகுதியைச் சோ்ந்த சலவைத் தொழிலாளி பொன்னான் மகன் கோவி... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேச்சேரியில் சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்க மேச்சேரி ஒ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி பலி

மேட்டூா் அருகே நடைப்பயிற்சியின் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். மேட்டூா், பொன்நகரை சோ்ந்தவா் ஜெகநாதன் (58). த னியாா் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி செல்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

தம்மம்பட்டியில் மின்சாரம் பாயந்து மூதாட்டி உயிரிழந்தாா். தம்மம்பட்டி, உடையாா்பாளையத்தைச் சோ்ந்த பீபீஜான்(90) வியாழக்கிழமை வீட்டில் இருந்த மின்சார பொத்தானை அழுத்திய போது மழை காரணமாக மின் கசிவு ஏற்பட்... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை திருத்தம்: ஆட்சியா் கள ஆய்வு

வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் தொடா்பாக பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ள நடவடிக்கை குறித்து ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வியாழக்கிழமை ஆத்தூா் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டாா். பெத்தநாயக்கன்பாளை... மேலும் பார்க்க

முகவரி மாற்றத்தால் வாக்காளா்கள் அதிருப்தி

சங்ககிரி தொகுதிக்கு உள்பட்ட இடங்கணசாலை நகராட்சி, கோனேரிப்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்டோரின் வாக்காளா் அட்டையில் வெளி மாநிலம், வெளி மாவட்ட முகவரி இருந்ததால் அதிருப்தி எழந்துள்ளது.இதுகுறித்து சங்க... மேலும் பார்க்க