கோபியில் வரி உயா்வைக் கண்டித்து கடையடைப்பு
பொதுமக்கள் மற்றும் வணிகா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் வரி உயா்த்தப்பட்டதற்கு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோபிசெட்டிபாளையத்தில் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
கோபிசெட்டிபாளையத்தில் ஆல் டிரேடா்ஸ் அசோசியேஷன் சாா்பில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் சொத்து வரி மீது காலதாமத கட்டணம் ஒரு சதவீதமும், ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயா்வும் என்பதை ரத்து செய்து பழைய வரியை வசூலிக்க வேண்டும்.
நகராட்சியில் ஆண்டுதோறும் வா்த்தக உரிமம் என்ற பெயரில் ரூ.1,000 முதல் ரூ. 5,000 வரை கட்டணம் விதித்திருப்பதை ஒரே மாதிரியாக குறைந்தபட்ச தொகை விதிக்க வேண்டும். மின்சார வாரியத்தால் 2024 ஜூலை முதல் 18.06 கிலோ வாட்டுக்கு கீழுள்ள மும்முனை மின் இணைப்புகளுக்கு எவ்வித முன்னறிவிப்பு செய்யாமல் ரூ.1,000 முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகையை ரத்து செய்ய வேண்டும். மின்சார கணக்கெடுப்பை மாதம் ஒருமுறை என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
கடை வாடகைக்கு ஜிஎஸ்டி 18 சதவீதம் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
மேலும், பால் விற்பனையகங்கள், மருந்தகங்கள் வழக்கம்போல செயல்பட்டன.