``ரூ.12 கோடி பறிபோனது; பெற்றோரையும் இழந்து தனிமரமாக தவிக்கிறேன்'' - மும்பை தொழில...
கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தடம்: தமிழக அரசு நிதி ஒதுக்கீடு!
சென்னையில் கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தடத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னையில் முதல் கட்டமாக இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் கோயம்பேடு - ஆவடி வரையிலான புதிய வழித்தடத்தை பட்டாபிராம் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டு சாத்தியக்கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டது.
இந்த அறிக்கையின் படி கோயம்பேடு மெட்ரோ நிலையத்திலிருந்து தொடங்கும் இந்த வழித்தடம், பாடி புதுநகா், முகப்போ், அம்பத்தூா், திருமுல்லைவாயில், ஆவடி வழியாகச் சென்று பட்டாபிராம் (வெளிவட்டச் சாலையில்) முடிவடைகிறது.
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் வரையிலான இந்த மெட்ரோ வழித்தடம் ரூ.9,928 கோடி மதிப்பீட்டில் 21.7 கி.மீ. தொலைவுக்கு அமைய உள்ளது. 19 மெட்ரோ ரயில் நிலையங்கள், மூன்று மேம்பாலச் சாலைகளுடன் இந்த திட்டம் அமையவிருக்கிறது.
இதற்கு மத்திய அரசும் தமிழக அரசும் ஏற்கெனவே ஒப்புதல் தெரிவித்திருந்த நிலையில் அந்த வழித்தடத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகளை தொடங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக ரூ. 2,442 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.