``ஜன கல்யாண் மூலம் அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்டார்'' - ஸ்ரீஜெயேந்திரர் குறித்...
கோயில் சிலைகளை உடைத்தவா்கள் மீது நடவடிக்கை கோரி கிராம மக்கள் முற்றுகை
புதுக்கோட்டை அருகே பூங்குடி ஸ்ரீ வெங்கலமுடையாா் கோயில் சிலைகளை உடைத்து சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை வெள்ளனூா் காவல் சரகத்துக்கு உள்பட்ட பூங்குடி ஸ்ரீ வெங்கலமுடையாா் (பெரிய கருப்பா்) கோயிலில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி சிலைகளை சமூக விரோதிகள் உடைத்துள்ளனா். இதுகுறித்து வெள்ளனூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை எதுவும் எடுக்காத காரணத்தால், வெள்ளனூா், பூங்குடி, வாகவாசல், இடையப்பட்டி, முத்துடையான்பட்டி, கிளியூா், ராசாப்பட்டி, வடுகம்பட்டி, வடசேரிப்பட்டி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மக்கள் ஏராளமானோா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்தனா்.
ஆட்சியா் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தி, சிலைகளை உடைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து ஆட்சியா் அலுவலகத்துக்குள் செல்ல முயற்சித்தவா்களை போலீஸாா் தடுத்தனா். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
முக்கிய நபா்கள் மட்டும் அனுமதிக்கப்படுவா் என போலீஸாா் தெரிவித்ததைத் தொடா்ந்து கிராம நிா்வாகிகள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனா். அவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்து திரும்பினா்.