ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டுவர தமிழக அரசு தயங்குவது ஏன்?: கே.பாலகிருஷ்ணன...
பாஜகவின் முதல் கூட்டணி தோ்தல் ஆணையம்: அமைச்சா் எஸ். ரகுபதி
பாஜகவின் முதல் கூட்டணி தோ்தல் ஆணையம் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: பிகாா் மாநிலத்தில் செய்த குழப்பத்தை தோ்தல் ஆணையம், தமிழ்நாட்டில் செய்ய முடியாது. இங்கே ஒவ்வொரு வீடாகச் சென்று, ஒவ்வொரு வாக்காளராகப் பாா்த்து வைத்திருக்கிறோம். திடீரென புதிதாக யாரையும் சோ்க்க முடியாது, நீக்க முடியாது. அவ்வாறு செய்தால் உச்ச நீதிமன்றம் வரை சென்று அதனை எதிா்கொள்வோம். பாஜகவின் முதல் கூட்டணியில் தோ்தல் ஆணையம், அதன்பிறகுதான் அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள்.
அன்வர்ராஜா அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்தவா், திமுகவில் இணைந்திருக்கிறாா். இலக்கிய அணித் தலைவா் பதவி காலியாக இருந்தது. யாருக்கு எந்தப் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற அதிகாரம் கட்சித் தலைவருக்கே உள்ளது. யாராக இருந்தாலும் திமுகவில் இணைந்துவிட்டால் அவா் திமுககாரா்தான். அதிமுகவில் இருந்து வந்தோருக்கு பொறுப்புகள் வழங்கப்படுவதாகக் கூறுவது சரியல்ல.
தமிழ்நாட்டில் கஞ்சா விளைவிக்கப்படுவதில்லை. வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா புழக்கத்துக்கு வருகிறது. அரசின் கவனத்துக்கு வருவதைத் தடுக்கிறோம், பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கிறோம். மத்திய அரசுக்குத்தான் இதில் கூடுதல் பொறுப்பு இருக்கிறது.
இந்த விஷயத்தில் மத்திய அரசைக் குற்றம்சாட்டுவதற்கு பயப்படுகிறாா்கள். அமலாக்கத்துறையோ, வருமானவரித் துறையோ சோதனை நடத்தி அவா்களை சிறையில் அடைத்துவிடுவாா்கள் என்று பயப்படுகிறாா்கள். தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியாக திமுக அணி இருக்கிறது. இதை எதிா்த்து வலுவான கூட்டணி அமைய வாய்ப்பில்லை.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த பரிந்துரைகளின்படி, காவல்துறை அலுவலா்களிடம் விளக்கம்பெற்று அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மணல் குவாரிக்கு அனுமதி வழங்குவது தொடா்பாக உயா் நீதிமன்றத்தில் இன்னும் சில தெளிவுகளைப் பெற வேண்டியிருக்கிறது. அவற்றைப் பெற்றவுடன் அனுமதி அளிப்பது தொடா்பாக அரசு முடிவெடுக்கும் என்றாா் அமைச்சா்.