கோவில்பட்டியில் அனைத்துப் பேருந்துகளும் இன்று முதல் கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்: நகராட்சி ஆணையா் அறிவிப்பு
கோவில்பட்டியில் அனைத்து பேருந்துகளும் வெள்ளிக்கிழமை (ஜன.3) முதல், கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் கமலா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கோவில்பட்டி நகராட்சி அண்ணா பேருந்து நிலைய (பழைய பேருந்து நிலையம்) வளாகத்தில் ஓடுதளம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப் பணிகள் நடைபெறுவதற்கு வசதியாக பேருந்துகளை
இடம் மாற்றி நிறுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி தலைமையில்
வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் துறை சாா்ந்த அலுவலா்கள்,
தனியாா் பேருந்து, சிற்றுந்து உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இக் கூட்டத்தில், அனைத்து பேருந்துகளையும் கூடுதல் பேருந்து நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை முதல் இயக்குவது என முடிவு செய்யப்பட்டது. அண்ணா பேருந்து நிலையம் முன் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட மட்டும் நிறுத்த வேண்டும்.
பிரதான சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளதால்,
கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து தூத்துக்குடி, விளாத்திகுளம் செல்லும் பேருந்துகள் இளையரசனேந்தல் சாலை வழியாக பிரதான சாலை (இஎம்ஏஆா் ஜவுளிக்கடை), மாதாங்கோவில் தெரு வழியாக செல்ல வேண்டும்.
கழுகுமலை, சங்கரன்கோவில், திருநெல்வேலி, தென்காசி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள், பிரதான சாலை வழியாக நகருக்குள் வந்து மீண்டும் இளையரசனேந்தல் சாலை வழியாக கூடுதல் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
தூத்துக்குடி, விளாத்திகுளம் பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் பூங்கா சாலையில் பயணிகளை இறக்கிவிட்டு இனாம்மணியாச்சி பாலம் வழியாக கூடுதல் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
சிற்றுந்துகள் அண்ணா பேருந்து நிலைய வளாகத்தின் முன்பகுதியில்
உள்ள சுப்பையா தேவா் மிட்டாய் கடை முன்பாகவும்,
மற்ற பேருந்துகள் மேற்கு பேருந்து நிலையத்தில் நிற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.