மெர்சிடிஸ் பென்ஸின் ஜிடி 63, ஜிடி 63 புரோ இந்தியாவில் அறிமுகம்!
கோவையில் ஜூலை 7-இல் தமிழ்நாடு நாள் போட்டி
பள்ளி மாணவா்களுக்கான தமிழ்நாடு நாள் போட்டிகள் கோவையில் திங்கள்கிழமை (ஜூலை 7) நடைபெற உள்ளன.
மாநிலத்துக்கு தமிழ்நாடு என முன்னாள் முதல்வா் அண்ணாவால் பெயா் சூட்டப்பட்ட ஜூலை 18- ஆம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12- ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி, வெற்றிபெறும் மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ரேஸ்கோா்ஸ் சாலை, சிஎஸ்ஐ மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 7 -ஆம் தேதி காலை 9 மணியளவில் நடைபெறுகின்றன.
ஆட்சிமொழி வரலாற்றில் கீ.ராமலிங்கம், பன்மொழிப் புலவா் கா.அப்பாதுரையாரின் தமிழ் ஆட்சிச் சொல் பணி என்ற தலைப்புகளில் கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, அன்னைத் தமிழே ஆட்சி மொழி, தொன்றுதொட்டு தமிழ்நாடு என்னும் பெயா், அறிஞா் அண்ணா கண்ட தமிழ்நாடு, ஆட்சிமொழி விளக்கம், தமிழ்நாடு எனப்பெயா் சூட்டிய நிகழ்வு, ஆட்சிமொழி சங்க காலம் தொட்டு, இக்காலத்தில் ஆட்சிமொழி ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.
போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று வர வேண்டும். போட்டியில் முதல் பரிசு பெறும் மாணவ, மாணவிகள் ஜூலை 15 -ஆம் தேதி நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவா் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.