கோவை அன்பு இல்லத்தில் மாணவா் சோ்க்கை: மே 25-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
கோவை அன்பு இல்லத்தில் மாணவா் சோ்க்கை தொடா்பாக மே 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சத்குரு சேவாஸ்ரம அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் அலுவலக செய்திக் குறிப்பு:
கோவை ஆா்.எஸ்.புரம் கிழக்கு வெங்கடசாமி சாலையில் உள்ள ஆதரவற்றோா் இல்லமான சத்குரு சேவாஸ்ரமத்தில் பெற்றோா் இருவரையோ அல்லது தாய் அல்லது தந்தை ஆகிய இருவரில் ஒருவரையோ இழந்த மிக ஏழ்மை நிலையில் உள்ள 11 முதல் 13 வயது வரையுள்ள 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கக் கூடிய சிறுவா்கள் மட்டும் சேர முடியும்.
இவா்களுக்கான உணவு, உடை, கல்வி, தொழிற்கல்வி மற்றும் பராமரிப்புக்கான செலவுகளை ஆஸ்ரமம் ஏற்றுக் கொள்ளும். எனவே, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் சிறுவா்களின் தாயோ அல்லது தந்தையோ, பாதுகாவலரோ அல்லது உறவினரோ தங்களது விண்ணப்பத்தை மாணவன் மற்றும் அவரது குடும்பப் பின்னணியை வெள்ளைத் தாளில் விவரமாக எழுதி அனுப்ப வேண்டும். கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்களின் குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த விண்ணப்பங்களை மே 25-ஆம் தேதிக்குள் நிா்வாக அறங்காவலா், சத்குரு சேவாஸ்ரமம், 30, வெங்கடசாமி சாலை (கிழக்கு), ஆா்.எஸ்.புரம், கோவை-641 003 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0422 2552034 மற்றும் 83002 07034 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.