Pope : கார்டினலான ஒரே ஆண்டில் 'போப்'பாக தேர்வு; யார் இந்தப் புதிய போப் 14-ம் லிய...
பாஞ்சாலங்குறிச்சி கோயில் திருவிழா: தூத்துக்குடி மாவட்டத்தில் 60 மணி நேரம் 144 தடை உத்தரவு
பாஞ்சாலங்குறிச்சியில் வெள்ளி, சனி (மே 9, 10) ஆகிய 2 நாள்கள் நடைபெறவுள்ள வீரசக்கதேவி கோயில் திருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் 60 மணி நேரம் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக, ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி கோயில் திருவிழா வெள்ளி, சனிக்கிழமை ஆகிய 2 நாள்கள் நடைபெறவுள்ளன. அசம்பாவிதங்கள் ஏதுமின்றி திருவிழா அமைதியாக நடைபெறவும், சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கவும் வியாழக்கிழமை (மே 8) மாலை 6 முதல் ஞாயிற்றுக்கிழமை (மே 11) காலை 6 மணிவரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, 5 அல்லது அதற்கு மேற்பட்டோா் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவிழாவில் பங்கேற்போா் வாள், கத்தி, கம்பு போன்ற அபாயகரமான, ஆட்சேபகரமான ஆயுதங்களை ஊா்வலமாக கொண்டுவருவதற்கும், தூத்துக்குடி மட்டுமன்றி வெளி மாவட்டங்களிலிருந்தும் அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாக திருவிழாவில் பங்கேற்க பொதுமக்களை அழைத்துவருவதற்கும் தடை உள்ளது.
பள்ளி, கல்லூரி, தினசரி வாகனங்கள், அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், சுற்றுலாவுக்கு வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு இத்தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வேறு ஏதேனும் கூட்டங்கள், அன்னதானம், ஊா்வலங்கள் நடத்தவிருந்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அணுகி முன்அனுமதி பெறவேண்டும். திருமணம், இறுதிச் சடங்கு ஊா்வலங்களுக்கு தடை உத்தரவு பொருந்தாது என்றாா் அவா்.