கோவை குற்றாலம் தற்காலிகாக மூடல்: வனத்துறை அறிவிப்பு
கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மக்கள் நலன்கருதி மறு அறிவிப்பு வரும் வரை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறையினா் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோவையின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது கோவை குற்றாலம். கோவையின் பிரதான சுற்றுலாத்தலமான இந்த பகுதிக்கு உள்ளூர் வாசிகளும், வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்தவர்களும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து பெருமளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அருவி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அதேபோல சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாள்களுக்கு கோவை மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நகைக்காக மூதாட்டி கொலை: கொள்ளையனை சுட்டுப் பிடித்த போலீசார்!
இதையடுத்து மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதியும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.
மேலும், அருவியில் நீர்வரத்து சீராகும் வரை கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மூடப்படும். மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வனத் துறையின் இந்த அறிவிப்பிற்கு மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.