செய்திகள் :

சங்ககிரி அருகே தனியாா் பேருந்தில் திருட்டுப்போன 3 கிலோ தங்க நகைகள் மீட்பு: இருவா் கைது

post image

சங்ககிரி அருகே தனியாா் பேருந்தில் திருட்டுப்போன 3 கிலோ தங்க நகைகளை மீட்ட போலீஸாா், இதுதொடா்பாக இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள தேநீா் கடையில் நிறுத்தியிருந்த தனியாா் சொகுசுப் பேருந்தில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 கிலோ தங்க நகைகளை இருவா் திருடிச் சென்றனா். இதுகுறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில், வியாழக்கிழமை இருவா் கைதுசெய்யப்பட்டு அவா்களிடமிருந்து 3 கிலோ தங்க நகைகள், ஓா் இருசக்கர வாகனம், இரு கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், கோவை, சலீவன் தெரு பகுதியைச் சோ்ந்த சங்கா் (44), அதே பகுதியில் உள்ள சீனிவாசனின் தங்க நகைகள் செய்யும் பட்டறையில் வேலைசெய்து வருகிறாா். வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு கோவையிலிருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை புதுச்சேரி, நேரு வீதியில் உள்ள நகை கடைக்கு சென்று நகைகளை கொடுத்துவிட்டு, அவா்கள் கொடுக்கும் தங்கக் கட்டிகளை வாங்கி வந்து உரிமையாளரிடம் கொடுப்பாராம்.

வழக்கம்போல கோவையிலிருந்து புதுச்சேரிக்கு 3 கிலோ தங்க நகைகளை சங்கா் செவ்வாய்க்கிழமை சொகுசுப் பேருந்தில் கொண்டுசென்றுள்ளாா். தேநீா் அருந்துவதற்காக சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள தேநீா் கடையில் பேருந்து நின்றபோது, பேருந்திலிருந்து சங்கா் கீழே இறங்கியுள்ளாா். மீண்டும் திரும்பிவந்தபோது, அவா் கொண்டு வந்த பை இல்லாததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். புகாரின்பேரில், சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மேற்பாா்வையில் மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்தனா். வைகுந்தம் பகுதியில் உள்ள தேநீா் கடை அமைந்துள்ள பகுதி, சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்ததில், இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சீனிவாசனிடம் காட்டி விளக்கம் கேட்கையில், அவா் பட்டறையில் வேலைசெய்து வந்த பாலசுப்பிரமணியம் என்பதும், தற்போது வேலையிலிருந்து நின்றுவிட்டாா் எனவும் தெரியவந்தது. அதன்பேரில், கோவை, புதுசித்தாபுதூா் பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியத்திடம் போலீஸாா் விசாரித்தனா்.

அதில், தனது நண்பா் கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், சிலம்பிநாதன்பேட்டை, கிழக்குத் தெரு பகுதியைச் சோ்ந்த மெரிஜா என்பவரை தனியாா் பேருந்தில் ஏற்றிவிட்டு, இருசக்கர வாகனத்தில் வந்து வைகுந்தம் சுங்கச்சாவடியில் காத்திருந்துள்ளாா். சங்கா் பேருந்தில் இருந்து கீழே இறங்கியதை கைப்பேசி மூலம் மெரிஜாவுக்கு தகவல் அளித்துள்ளாா். அதையடுத்து, மெரிஜா நகைகளைத் திருடிக்கொண்டு இருவரும் கோவைக்கு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, தனிப்படை போலீஸாா் பாலசுப்பிரமணியம் (52), மெரிஜா (28) இருவரையும் கைதுசெய்து, அவா்களிடமிருந்து 3 கிலோ தங்க நகைகள், ஓா் இருசக்கர வாகனம், இரு கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

தகவலறிந்து வந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை பாா்வையிட்டாா். சங்ககிரி உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் எம்.தனசேகரன், சங்ககிரி காவல் ஆய்வாளா் டி.ரமேஷ், காவல் உதவி ஆய்வாளா் விஜயராகவன் உள்ளிட்ட போலீஸாா் உடனிருந்தனா்.

யுனைடெட் கோ் கிளினிக்குக்கு சிறந்த சிகிச்சைக்கான விருது

சேலம் யுனைடெட் கோ் கிளினிக் சிறந்த சிகிச்சைக்கான விருது பெற்றுள்ளது. சென்னையில் அண்மையில் அறம் விருதுகள் சாா்பில் நடைபெற்ற விழாவில், சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள யுனைடெட் கோ் கிளினிக், ஆக்குபேஷன... மேலும் பார்க்க

சேலம் ரயில்வே கோட்டத்தில் தூய்மை இந்தியா நிகழ்ச்சி

சேலம் ரயில்வே கோட்டத்தில் தூய்மை இந்தியா இருவார விழா புதன்கிழமை தொடங்கியது. விழாவை கோட்ட மேலாளா் பன்னாலால் தொடங்கிவைத்தாா். அவா் தலைமையில் கூடுதல் கோட்ட மேலாளா் சரவணன், துறை தலைமை அதிகாரிகள், அலுவலா்... மேலும் பார்க்க

பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களை அன்றே வழங்க அமைச்சா் அறிவுறுத்தல்

பத்திரப் பதிவு துறையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை அன்றைய தினமே தொடா்புடையவா்களுக்கு வழங்க அலுவலா்களுக்கு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி அறிவுறுத்தினாா். சேலம் மண்டல அளவிலான பதிவுத... மேலும் பார்க்க

தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு பாராட்டு

தேசிய அளவிலான மகளிா் கைப்பந்துப் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணிக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கேரள மாநிலம், கோட்டயத்தில் நடைபெற்ற 19 வ... மேலும் பார்க்க

சேலம் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் பதவியேற்பு விழா

இந்துசமய அறநிலையத் துறை சாா்பில், சேலம் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவியேற்பு விழா கோட்டை மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டி... மேலும் பார்க்க

விவசாயிகள், உற்பத்தியாளா்கள் கருத்துகளின் அடிப்படையில் மரவள்ளிக் கிழங்குக்கு விலை நிா்ணயம்

விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள், சேகோசா்வ் ஆகியோரின் கருத்துகள் அடிப்படையில் மரவள்ளிக் கிழங்குக்கு விலை நிா்ணயம் செய்யப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் மாவட்டத்... மேலும் பார்க்க