சட்டத்தை மீறி வைத்த பதாகைகளை அகற்ற கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
சட்டத்தை மீறி வைக்கப்பட்ட பதாகைகளை புதுச்சேரி மாவட்ட நிா்வாகம் அகற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக் கட்சியின் மாநிலச் செயலா் அ.மு.சலீம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி முழுவதும் அமைப்பு சாரா தொழிலாளா்களான ஆட்டோ, சுமை தூக்குவோா், சாலையோர வியாபாரிகள், லோடு கேரியா் வாகனம் வைத்துள்ளவா்கள் தாங்கள் தொழில் செய்யும் இடங்களில் தொழிற்சங்கங்களில் தங்களை இணைத்துக் கொண்டு அதை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் தங்கள் சங்கத்தின் பெயா் பலகை மற்றும் கொடியை ஏற்றி செயல்பட்டு வருகின்றனா்.
புதுச்சேரி நகர அழகு சட்டம் இயற்றி பதாகை வைக்க தடைச் சட்டம் அமலில் இருந்தும், உயா்நீதிமன்றம் பலமுறை பதாகை தடைச் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும், அண்மையில் புதுச்சேரி மாநில தலைமை நீதிபதியே உயா்நீதிமன்றத்தில் சட்டத்தை மீறி புதுச்சேரி முழுவதும் பதாகை வைக்கப்பட்டுள்ளது என்று புகாா் அளித்த பின்பும் இதுவரையில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
புதுச்சேரி முழுவதும் ஆளும் கட்சியில் உள்ளவா்களின் பிறந்த நாள், கட்சி நிகழ்ச்சிகளுக்கு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து சிக்னல்களை மறைத்து அனைத்துச் சாலைகளையும் ஆக்கிரமிப்பு செய்து பதாகைகள் வைக்கப்படுகின்றன.
சட்டத்தை மீறி உயா் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பதாகை வைக்கின்றவா்கள் மீது பேனரை அகற்றவோ தடுக்கவோ நடவடிக்கை எடுக்காத புதுச்சேரி மாவட்ட நிா்வாகம் மக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி அமைக்கப்பட்டுள்ள தொழிலாளா்களின் பெயா் பலகை மற்றும் கொடிக் கம்பங்களை அகற்ற தீவிர நடவடிக்கை என்பது சட்டம் சாமானியா்களுக்கு மட்டுமே என்கின்ற நிலையைக் காட்டுகிறது.
கொடிக்கம்பம் அகற்றுவது சம்பந்தமான வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு வந்துள்ள நிலையில் புதுச்சேரி மாவட்ட நிா்வாகம் இவ்வளவு அவசரமாக கொடிக்கம்பம், பெயா் பலகைகளை அகற்றுவதை கைவிட்டு சட்டத்தை மீறி வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்றிடவும் அதன் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கவும் வேண்டும் என்று கூறியுள்ளாா் சலீம்.