சட்ட விரோதமாக பட்டாசு திரி பதுக்கியதாக இருவா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்ட விரோதமாக பட்டாசு திரி, கரி மருந்து பதுக்கிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் உள்கோட்டம் நத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதை தடுக்க போலீஸாா் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது வத்திராயிருப்பு வட்டம் ருத்ரநாயக்கன்பட்டியைச் சோ்ந்த முனியாண்டி மகன்கள் பிரவீன் (28), தங்கேஸ்வரன் (25) ஆகியோா் சோ்ந்து தங்களது வீடு அருகே உள்ள தகரக் கொட்டகையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்க தேவையான திரி, கரி மருந்து பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, 14 கட்டுகள் திரி, 13 கிலோ கரி மருந்தை பறிமுதல் செய்த போலீஸாா், பிரவீன், தங்கேஸ்வரன் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.