முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்
சதமடித்த ஷாத்மன் இஸ்லாம்: வங்கதேசம் 64 ரன்கள் முன்னிலை!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் 64 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நேற்று (ஏப்ரல் 28) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
இதையும் படிக்க: இந்திய கிரிக்கெட் இனி மாறிவிடும்; வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் குறித்து முன்னாள் இந்திய வீரர்!
தைஜுல் இஸ்லாம் அபாரம்
வங்கதேசத்துக்கு எதிராக டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஜிம்பாப்வே அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 67 ரன்களும், நிக் வெல்ச் 54 ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, பிரையன் பென்னட் மற்றும் பென் கரண் தலா 21 ரன்கள் எடுத்தனர்.
வங்கதேசம் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நயீம் ஹாசன் 2 விக்கெட்டுகளையும், தன்சிம் ஹாசன் ஷகிப் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
டஃபாட்ஸ்வா சிகா 18 ரன்களுடனும், பிளெஸ்ஸிங் முஸராபானி 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே ஜிம்பாப்வே அணி அதன் கடைசி விக்கெட்டினை இழந்தது. முஸராபானியின் விக்கெட்டினை தைஜுல் இஸ்லாம் வீழ்த்தினார். இதன் மூலம், ஜிம்பாப்வே 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையும் படிக்க: தஸ்மின் சதம் வீண்: ஸ்னே ராணா சுழலில் வீழ்ந்தது தெ.ஆப்பிரிக்கா!
ஷாத்மன் இஸ்லாம் சதம், 64 ரன்கள் முன்னிலை
ஜிம்பாப்வே 227 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேசம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷாத்மன் இஸ்லாம் சதம் விளாசி அசத்தினார். அவர் 181 பந்துகளில் 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, முஷ்பிகர் ரஹீம் 40 ரன்களும், அனமுல் ஹாக் 39 ரன்களும் எடுத்தனர்.
ஜிம்பாப்வே தரப்பில் வின்செண்ட் மசகெசா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிளெஸ்ஸிங் முஸராபானி, வெலிங்டன் மஸகட்ஸா மற்றும் பிரையன் பென்னட் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
வங்கதேச அணி ஜிம்பாப்வேவைக் காட்டிலும் 64 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. மெஹிதி ஹாசன் மிராஸ் 16 ரன்களுடனும், தைஜுல் இஸ்லாம் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.