சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சாய்வு நடைமேடை: 21 டன் எடையில் பெல் நிறுவனம் தயாரித்து வழங்கியது
சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் நடந்து செல்ல வசதியாக 21 டன் எடையிலான சாய்வு நடைமேடையை திருச்சி பெல் தொழிற்சாலை நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது.
சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருவது வழக்கம். கூட்டம் அதிகமான தருணங்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் சுற்றி அனுப்பப்படுவா். இதற்காக இரும்பு நடைபாதை மேம்பாலங்கள் உள்ளன.
தெற்குப்பகுதியில் உள்ள நடைமேம்பாலமானது, கோயிலில் அம்மன் தேரோட்ட நிகழ்வு மற்றும் இதர ஊா்வலங்களின்போது அகற்றி, மீண்டும் பொருத்த கடும் சிரமப்படும் நிலை இருப்பதை கருத்தில் கொண்டு, எளிதில் பொருத்தி அகற்றும் வகையிலான சாய்வு நடைமேடையை வடிவமைக்க திருச்சி பெல் நிறுவனம் திட்டமிட்டது.
அதன்படி, 21 டன் எடையிலான இரும்பு காரிடா்களை பயன்படுத்தி சாய்வு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. முன்பிருந்த படிக்கட்டுகள் வடிவிலான நடைமேடைக்கு பதிலாக, சாய்வு தளமாக நடந்து செல்லும் வகையில் இந்த நடைமேடை வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றை கோயில் வளாகத்தின் தெற்குப்பகுதியில் பொருத்துவதன் மூலம், பக்தா்கள் கூட்டம் அதிகமான தருணங்களில் இந்த சாய்வு தளம் வழியாக எளிதிலும், விரைவாகவும் சென்று அம்மனை தரிசிக்க முடியும்.
இந்த வசதியை கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வு, பெல் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெல் தொழிற்சாலையின் பராமரிப்பு மற்றும் சேவைகள் துறையின் பொது மேலாளா் கே. ரவீந்திரன், கோயில் நிா்வாக அலுவலா்களிடம் ஒப்படைத்தாா். கோயில் மணியம் பழனிவேல் தலைமையிலான ஊழியா்கள் பெற்றுக் கொண்டனா்.