சமூக வலைதளத்தில் பழக்கம்; 500 பெண்களிடம் பணம் பறித்த 23 வயது இளைஞர்... பகீர் பின்னணி!
Delhi: டெல்லியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் துஷார் பிஷ்ட், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி பல பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துஷார் பிஷ்ட், பிரேசிலிய மாடலின் புகைப்படத்தை பயன்படுத்தி, தன்னை அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த மாடலாக காட்டிக் கொண்டு, பம்பிள், ஸ்னாப்சாட் போன்ற ஆப்களில் 18 முதல் 30 வயதுடைய பெண்களுடன் நட்புடன் பழகியுள்ளார்.
அந்தப் பெண்களின் நம்பிக்கையைப் பெற்று, அவர்களிடம் நெருக்கமாக பழகி, தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வாங்கியுள்ளார். பெண்கள் அவற்றை பகிர்ந்தபின், அந்தக் காட்சிகளை வைரலாக்குவதாக மிரட்டி, பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் அளித்த புகாரின் மூலம் இது வெளிச்சத்துக்கு வந்தது.
அந்த மாணவி, தான் துஷார் பிஷ்டின் மோசடியில் சிக்கியதை உணர்ந்து, காவல்துறையில் புகார் செய்துள்ளார். தனது புகாரில், "துஷார் பிஷ்டி, என்னுடன் நட்பு பாராட்டி நெருக்கமாக பழகிய பிறகு, தனிப்பட்ட புகைப்படங்களைக் கேட்டார். நான் அதை பகிர்ந்த பிறகு என்னை பிளாக்மெயில் செய்யத் தொடங்கினார்" எனக் கூறியுள்ளார்.
காவல்துறையினர் சைபர் டெக்னாலஜியின் உதவியுடன் குற்றவாளியை கண்டுபிடித்து , அவரை கைது செய்தனர். விசாரணையின் போது, துஷார் பிஷ்ட் 500-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பண மோசடி செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கையாக அமைந்துள்ளது. யாரையும் முழுமையாக நம்புவதற்கு முன் அவர்கள் பற்றிய உண்மை தகவல்களை அறிந்துகொள்ள வேண்டும், பெண்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பகிரும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்படுகின்றனர்.