சரக்குப் பெட்டக லாரிகளில் ஆவணமின்றி பொருள்கள் ஏற்றி வருவதைத் தடுக்க கோரிக்கை
தூத்துக்குடிக்கு வெளிமாவட்டங்களிலிருந்து சரக்குப் பெட்டக லாரிகளில் ஆவணங்களின்றி பொருள்கள் ஏற்றிவருவதைத் தடுக்கக் கோரி தூத்துக்குடி சுங்கத் துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக திருப்பூா் மாவட்ட ஏற்றுமதி வாகன உரிமையாளா்கள் சங்கத்தினா், ஐக்கிய ஜனதா தள தொழிலாளரணி மாநிலத் தலைவா்- தொழிற்சங்க பேரவைத் தலைவா் தாமரை வெங்கடேசன் தலைமையில் அளித்த மனு: தூத்துக்குடி சரக்குப் பெட்டகக் கிடங்கிலிருந்து திருப்பூா், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு லாரிகளில் சரக்குப் பெட்டகங்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. அவை தூத்துக்குடிக்கு திரும்பிவரும்போது, ஆவணமில்லாத பொருள்களை குறைந்த வாடகைக்கு ஏற்றி வருகின்றன. இதனால், அரசுக்கும், லாரி உரிமையாளா்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், பொருள்களும் சேதமடைகின்றன.
இதுதொடா்பாக திருப்பூா் மாவட்ட ஏற்றுமதி வாகன உரிமையாளா்கள் சாா்பில் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.
திருப்பூா் மாவட்ட ஏற்றுமதி வாகன உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ரத்தினசாமி, செயலா் சந்திரசேகரன், ஐக்கிய ஜனதா தள தொழிலாளரணி மாநிலச் செயலா் மாரிமுத்து, மாவட்டத் தலைவா் குழந்தைபாண்டி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.