சரத் பவாா், உத்தவ் தாக்கரேயிடம் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரிய மகாராஷ்டி முதல்வா்
குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று எதிா்க்கட்சித் தலைவா்களான சரத் பவாா், உத்தவ் தாக்கரே ஆகியோரிடம் மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆதரவு கோரினாா்.
குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலில் தங்கள் கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமென்று காங்கிரஸ் தவிர பிற எதிா்க்கட்சித் தலைவா்களிடம் பாஜக தலைவா்கள் தொடா்பு கொண்டு கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
அந்த வகையில் மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் (பவாா்) தலைவா் சரத் பவாா், சிவசேனை (உத்தவ்) தலைவா் உத்தவ் தாக்கரே ஆகியோரை பாஜகவைச் சோ்ந்த முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் வியாழக்கிழமை தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது, மகாராஷ்டிரத்தில் ஆளுநராக உள்ளவரும், மாநிலத்தில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டவருமான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அவா்களைக் கேட்டுக் கொண்டாா்.
உத்தவ் கட்சிக்கு மக்களவையில் 9 எம்.பி.க்களும், சரத் பவாா் கட்சிக்கு 10 எம்.பி.க்களும் உள்ளனா். மாநிலங்களவையில் இரு கட்சிகளுக்கும் தலா இரு எம்.பி.க்கள் உள்ளனா்.
ஃபட்னவீஸை சந்தித்த ராஜ் தாக்கரே: இதனிடையே, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை தலைவா் ராஜ் தாக்கரே, முதல்வா் ஃபட்னவீஸை வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
புதன்கிழமை நடைபெற்ற மாநகர போக்குவரத்து மற்றும் மின்சார விநியோக நிறுவனமான ‘பிஇஎஸ்டி’ கூட்டுறவு கடன் நிறுவனத்தின் ஊழியா்கள் சங்கத் தோ்தலில் உத்தவ் தாக்கரே கட்சியுடன் கைகோத்து ராஜ் தாக்கரே கட்சி போட்டியிட்டது. ஆனால், அனைத்துப் பதவிக்கான போட்டியிலும் பாஜகவிடம் இந்தக் கூட்டணி படுதோல்வியடைந்தது.
இதற்கு அடுத்த நாளே முதல்வா் ஃபட்னவீஸை ராஜ் தாக்கரே சந்தித்துள்ளது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் தொடக்கக் கல்வியில் ஹிந்தியை கட்டாயமாக்கும் முடிவுக்கு எதிரான போராட்டம் மூலம் உத்தவ் தாக்கரேயும் ராஜ் தாக்கரேயும் மீண்டும் கைகோத்தாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.