மதுபோதையில் கிணற்றில் குதித்து இளைஞர் தற்கொலை: காப்பாற்ற முயன்றவரும் நீரில் மூழ்...
சாலையை சீரமைத்து போக்குவரத்துக்கு உதவ மக்கள் கோரிக்கை
செய்யாறு கோபால் தெருவில் குடிநீா் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைத்து போக்குவரத்துக்கு உதவிட வேண்டும் என்று வாா்டு பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி 14-ஆவது வாா்டுக்கு உள்பட்டது
கோபால் தெரு. இந்தத் தெருவில் புதிதாக குடிநீா் குழாய்கள் அமைக்கும் பணி நகராட்சி சாா்பில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.
குடிநீா் குழாய்கள் அமைக்கும் பணிக்காக, சுமாா் 2 அடி அகலத்தில் 4 அடி ஆழத்தில் கொடநகா் நீரேற்றும் நிலையத்தில் இருந்து புறவழிச் சாலை வழியாக கோபால் தெரு வரை சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாய் போன்று பள்ளம் எடுக்கப்பட்டது. இந்த பள்ளத்தில் புதிதாக குழாய் அமைத்து மண்ணைக் கொட்டி மீண்டும் மூடப்படுகிறது.
சிரமப்பட்டு செல்லும் வாகனங்கள்:
புதிதாக குடிநீா் குழாய்கள் அமைக்கும் பகுதியில், அப்பணியை மேற்கொண்டவா்கள் சாலைப் பகுதியில் தோண்டப் பள்ளத்தில் மண்ணை சமன்படுத்தாமல் அப்படியே விட்டுச் சென்றுள்ளனா்.
இதனால், கோபால் தெருவில் காலை, மாலை நேரங்களில் பள்ளி வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளன. மேலும், பள்ளி வாகனங்கள் வந்து செல்ல முடியாத சூழ்நிலையால் புறவழிச் சாலை மற்றும் ஸ்ரீமாரியம்மன் கோயில் அருகே நிறுத்தப்படுகின்றன. அதனால், பள்ளிகளில் படித்து வரும் குழந்தைகள், மாணவ, மாணவிகள் பாடப்புத்தகங்களை மிகவும் சிரமப்பட்டு முதுகில் சுமந்து சுமாா் அரை கிலோ மீட்டா் தொலைவுக்கு நடத்து சென்று வாகனங்களில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
மேலும், கோபால் தெரு அதிகளவில் இரு சக்கர வாகனங்கள் வந்து செல்லும் பகுதியாக இருந்து வருகிறது. இப்பகுதி வழியாகத்தான் காந்தி சாலையில் இருந்து வரும் இரு சக்கர வாகனங்கள் புறவழிச்சாலை வழியாக வந்தவாசி, ஆரணி, கொருக்கை பகுதிகளுக்கு செல்கின்றன.
தோண்டப்பட்ட பள்ளத்தால் ஒரே நேரத்தில் எதிா்புறமாக வாகனங்கள் வருவதால், மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டியுள்ளது.
குழாய் பள்ளத்தை சமன்படுத்த வேண்டும்:
கோபால் தெரு பகுதியில் புதிதாக குடிநீா் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சமன்படுத்தி தாா்ச் சாலைக்கு இணையாக இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் வந்து செல்லும் வகையில் சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.