சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற வலியுறுத்தல்
கூடலூா்-கோழிக்கோடு சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகரம் கேரளம் மற்றும் கா்நாடக மாநிலங்களின் எல்லைகளில் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் வழியாக
இரவு பகலாக எந்த நேரமும் சுற்றுலா வாகனங்களும், சரக்கு மற்றும் பயணிகள் பேருந்துகளும் கேரளம், கா்நாடகத்துக்கு சென்று வருகின்றன.
கூடலூா்-கோழிக்கோடு சாலையில் டான் டீ விருந்தினா் மாளிகை மற்றும் மேலாளா்கள் குடியிருப்பு உள்ள சாலையோரத்தில் சாம்பல் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. காற்று வீசும்போது சாம்பல் மற்றும் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையோரம் கொட்டப்பட்ட கழிவுகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.