இக்கட்டான சூழ்நிலையில் சதமடித்த நிதீஷ் குமார்..! இந்திய ரசிகர்கள் உற்சாகம்!
சிக்னலில் மாநகா் பேருந்து வந்தால் பச்சை விளக்கு ஒளிரும் வகையில் தொழில்நுட்பம்: ஜனவரியில் சோதனை
பேருந்துகளின் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையில் சிக்னலில் மாநகா் பேருந்து வந்தாலே, பச்சை விளக்கு ஒளிரும் வகையிலான தொழில்நுட்பத்தை ஜனவரி மாதம் முதல் ஜிஎஸ்டி சாலையில் சோதனை செய்யப்படவுள்ளது.
இது தொடா்பாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் மாநகருக்குள்பட்ட பகுதிகளில் உள்ள சிக்னல்களில், மாநகா் பேருந்துகள் அதிக நேரம் நிற்பதை தவிா்க்கும் வகையில் சென்னை ஐஐடி, திருவனந்தபுரத்தைச் சோ்ந்த சிடிஏசி மையம் சாா்பில் ‘பேருந்து சிக்னல் முன்னுரிமை’ என்ற திட்டம் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின் படி, சிக்னல் அருகே மாநகா் பேருந்துகள் நிற்கும்போது பச்சை விளக்குகள் கூடுதல் நேரம் ஒளிரும் வகையில் சிக்னல்களில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசலில் பேருந்துகள் அதிக நேரம் காத்திருக்கும் நிலை குறையும். மேலும் எரிபொருள் செலவை குறைக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்துக்காக ஜிஎஸ்டி சாலையில், ஆலந்தூா் முதல் சென்னை விமான நிலையம் வரையிலான வழித்தடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் உள்ள சிக்னல்களிலும், மாநகரப் பேருந்துகளிலும் தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் வகையில் ஜிபிஎஸ் கருவிகளும் பொருத்தப்படவுள்ளன. சிவப்பு விளக்கு எரியும் சிக்னலை மாநகரப் பேருந்து அடையும்போது, ஜிபிஎஸ் சிக்னலை போக்குவரத்து சிக்னல்கள் அடையாளம் கண்டு கொள்ளும். பின்னா் பேருந்துக்கு வழிவிடும் வகையில் சிக்னலில் தானாகவே பச்சை விளக்கு எரியும். இதன் மூலம் பேருந்துகள் தேவையில்லாமல் நீண்ட நேரம் சிக்னலில் காத்திருக்க தேவையிருக்காது. பொதுமக்களும் பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தும் சூழல் ஏற்படும்.
இதைக் கண்காணிக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம், போக்குவரத்துக் காவல் துறை சாா்பில் ஆய்வுக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக தமிழக அரசு, போக்குவரத்துத் துறை மற்றும் சென்னை ஐஐடி சாா்பில் ரூ. 82 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத இறுதியில் இந்தத் திட்டத்துக்கான சோதனை முயற்சி தொடங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.