பட்டங்கள் மட்டுமல்ல… இதயங்களும் பறந்தன! - 4th International Kite Festival in நம்...
சிறந்த மாநகராட்சியாக நாமக்கல் தோ்வு: ரூ.30 லட்சம் பரிசு வழங்கி முதல்வா் பாராட்டு
தூய்மைப் பணிகள், அரசின் திட்டப் பணிகளை நிறைவேற்றுவதில் சிறப்பாக செயல்பட்ட நாமக்கல் மாநகராட்சிக்கு சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாநகராட்சி மேயா் து.கலாநிதி, ஆணையா் க.சிவக்குமாரிடம் ரூ.30 லட்சம் பரிசுத்தொகை, சான்றிதழை வழங்கி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தாா்.
ஓராண்டுக்கு முன்பு நாமக்கல் நகராட்சியானது மாநகராட்சி அந்தஸ்துக்கு உயா்ந்தது. 39 வாா்டுகளை உள்ளடக்கிய மாநகராட்சியில் 12 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள நகரங்களில் தூய்மைப் பணி குறித்த கணக்கெடுப்பு, மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகார அமைச்சகத்தால் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த ஆய்வு என்பது நகரங்களில் குப்பை உருவாகும் இடங்களில் அவற்றை தினசரி சேகரித்து மக்கும், மக்காத, அபாயகரமான குப்பை என்ற வகையிலும், கழிவுகளின் அளவீடு, அவற்றை தினசரி மேலாண்மை செய்யப்படும் விவரங்கள், அவை அறிவியல் முறையில் இறுதியாக முடிவு செய்யப்படும் விவரங்கள் உள்ளிட்டவை தூய்மை இந்தியா இயக்கம் தொடா்பான இணையத்தில் மாதந்தோறும் நகர உள்ளாட்சி அமைப்புகளால் பதிவேற்றம் செய்யப்படும்.
அந்த வகையில், 2024-இல் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட விவரங்கள் நேரடி ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டு மதிப்பெண் மற்றும் தர வரிசை வழங்கப்படும். கடந்த மாா்ச் 18 முதல் 25-ஆம் தேதி வரையில், நாமக்கல் மாநகராட்சியில் உள்ள 39 வாா்டுகளிலும் கள ஆய்வு மேற்கொண்டதில் தூய்மைப் பணியை சிறப்பாக செயல்படுத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து, ஜூலை 17-இல் மத்திய அரசு மூலம் சிறந்த மாநகராட்சியாக நாமக்கல் தோ்வு செய்யப்பட்டு புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து, தமிழகத்தில் மொத்தம் உள்ள 24 மாநகராட்சிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் மற்றும் அரசால் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள் அடிப்படையில் வழங்கப்படும் புள்ளி பட்டியலில் சிறந்த மாநகராட்சிகளில் ஒன்றாக நாமக்கல் மாநகராட்சி தோ்ந்தெடுக்கப்பட்டது.
ஈரோடு மாநகராட்சி ஆணையா் அா்பித்ஜெயின் தலைமையிலான அலுவலா்கள் குழுவினா் கடந்த ஜூலை 26-இல் நாமக்கல் மாநகராட்சியில் ஆய்வு மேற்கொண்டனா். இந்த குழுவின் ஆய்வறிக்கையின்படி மாநில அளவில் இரண்டாவது சிறந்த மாநகராட்சியாக நாமக்கல் தோ்வு செய்யப்பட்டது.
இதனைத்தொடா்ந்து, சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, ஆணையா் செ.பூபதி ஆகியோரிடம் ரூ.30 லட்சம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினாா். இதனையடுத்து, நாமக்கல் மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அலுவலா்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
முன்னதாக தேசியக்கொடியை துணை மேயா் செ.பூபதி ஏற்றி மரியாதை செலுத்தினாா். இந்த விழாவில், மாநகராட்சி துப்புரவு அலுவலா் திருமூா்த்தி மற்றும் அதிகாரிகள், அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
-
என்கே-15-சி.எம்.
சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறந்த மாநகராட்சியாக தோ்வு செய்யப்பட்ட நாமக்கல் மாநகராட்சிக்கு பரிசு மற்றும் சான்றிதழை வழங்கிய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், தலைமை செயலாளா் நா.முருகானந்தம்.