சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் சரிவு: அண்ணாமலை
திமுகவின் வாக்கு வங்கி குறைந்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கும் 27-ஆம் ஆண்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த மலர் அஞ்சலி நிகழ்ச்சியில் பாஜக தேசிய இளைஞரணி தலைவரும் எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது, ``தமிழகத்தில் பேருந்து, பள்ளி, கல்லூரி என எங்கும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கும்கூட பாதுகாப்பு இல்லை. காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலருக்குகூட பாதுகாப்பு இல்லை.
கோவையில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்றது, தீவிரவாதத் தாக்குதல். ஆனால், அதனை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் என்று தமிழக முதல்வர் தொடர்ந்து மறுத்து வருகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தீவிரவாதிகள் எங்கு இருந்தாலும் வேட்டையாடி கொண்டு வருவோம் என்பதற்கிணங்க, மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு முக்கிய காரணமான தீவிரவாதியை இந்தியாவுக்கு அழைத்து வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி அனுமதி பெற்றுள்ளார்.
இதையும் படிக்க:திமுக முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள்தான் இருக்கிறார்கள்: செல்லூர் ராஜு
திமுக அரசு, தனது கடைசி ஓராண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 2024-ல் திமுகவின் வாக்கு வங்கி 7 சதவிகிதம்வரை குறைந்துள்ளது; அடுத்த தேர்தலில் 20 சதவிகிதம்வரையில் குறையும். அதேபோல், முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறந்த முதல்வர்கள் பட்டியலிலும் சரிந்துள்ளார். பாஜகவின் வாக்கு வங்கி 21 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக தனியார் நிறுவனக் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது’’ என்று தெரிவித்தார்.
மேலும், தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு ``தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும்போது, தமிழக அரசே பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். இது அரசியல் கிடையாது’’ என்று பதிலளித்தார்.